உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /   வாகனங்கள் விரைவாக செல்ல அமைகிறது டோல் பிளாசா : திருத்தணி மலைகோவிலில் பணிகள் தீவிரம்

  வாகனங்கள் விரைவாக செல்ல அமைகிறது டோல் பிளாசா : திருத்தணி மலைகோவிலில் பணிகள் தீவிரம்

திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் விரைவாக செல்ல 6 கோடி ரூபாயில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் மையமான 'டோல் பிளாசா' அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள், பேருந்து, வேன், கார், ஆட்டோ, இரு சக்கர வாகனம் போன்ற வாகனங்கள் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல, கோவில் நிர்வாகம், பேருந்துக்கு 100 ரூபாய், கார், வேனுக்கு, 60 ரூபாய், ஆட்டோவுக்கு 30 ரூபாய் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு, 10 ரூபாய் வீதம் கட்டணமாக வசூலிக்கின்றனர். மலைக்கோவிலுக்கு வரும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஊழியர்களால் உடனுக்கு உடன், கட்டண தொகை பெறுவதில் காலதாமதம் ஆகிறது. இதனால், மலைப்பாதையில், வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. திருமண முகூர்த்தம் மற்றும் முக்கிய விழாக்களின் போது வாகனங்கள் மலைப்பாதையில் இருந்து அரக்கோணம் நெடுஞ்சாலை வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், வாகன ஓட்டிகளிடம் ஊழியர்கள் கட்டணம் பெறுவதில் காலதாமதம் ஆவது தான். இப்பிரச்னை தீர்க்க கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி ஆகியோர் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க, வாகன கட்டணம் வசூலிக்கும் இடமான 'டோல் பிளாசா' மூலம் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கலாம் என ஹிந்து அறநிலை துறை அமைச்சர், ஆணையர் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்று ஒப்புதல் பெற்றனர். இதையடுத்து, மலைப்பாதையில் நுழைவு வாயில் அருகே, 'டோல் பிளாசா' ஏற்படுத்தப்படும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது. இது குறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மலைக்கோவிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் நலன் கருதி, கோவில் நிதியில் இருந்து, 6 கோடி ரூபாயில் 'டோல் பிளாசா' அமைக்கும் பணிகள் கடந்த சில நாட் களுக்கு முன் துவக்கின. மலைப்பாதையில் 25 மீட்டர் அகலத்தில் டோல் பிளாசா அமைப்பதற்கு, தற்போது, பில்லர் அமைப்பதற்கு பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது. 'டோல் பிளாசா' பணி நான்கு மாதத்திற்குள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அதன் பின் மலைக்கோவிலுக்கு செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப் பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி