உயர்கோபுர மின்விளக்கு அகற்றம் இருளில் மூழ்கிய டோல்கேட் சந்திப்பு
திருவள்ளூர்:திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில், டோல்கேட் அருகே ரவுண்டானா அமைப்பதற்காக அகற்றப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு கம்பம், தற்போது வரை மீண்டும் அமைக்காததால், அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், ஆவடி பகுதியில் இருந்து திருப்பதி, திருத்தணி, ஊத்துக்கோட்டை செல்லும் வாகனங்கள் அனைத்தும், ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாக கலெக்டர் அலுவலகத்தை கடந்து செல்கின்றன. கலெக்டர் அலுவலகம் அருகே, டோல்கேட் பகுதியில் நான்கு சாலை சந்திக்கும் இடம் உள்ளது. இங்கு, வலதுபுறம் ஊத்துக்கோட்டை, இடதுபுறம் மருத்துவக் கல்லுாரி செல்லும் சாலை பிரிகிறது. நான்கு சாலை சந்திக்கும் இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும், சாலை குறுகலாக உள்ளதால், கனரக வாகனங்கள் திரும்புவதற்கு சிரமப்பட்டு வந்தன. இந்நிலையில், மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், டோல்கேட் சந்திப்பில் ரவுண்டானா அமைத்து, நான்கு புறமும் சாலை அகலப்படுத்தும் பணி, சில மாதங்களாக நடந்து வருகிறது. இதற்காக, 2 கோடி ரூபய் மதிப்பீட்டில் பணிகள் துவங்கியது. நான்கு பகுதியிலும் சாலை அகலப்படுத்திய பின், மழைநீர் கால்வாய் பணியும் நிறைவ டைந்தது. தற்போது, சாலை சந்திப்பு நடுவே ரவுண்டானா அமைக்கும் பணியும் நிறைவடைந்தது. இப்பணிகளுக்காக, சாலை நடுவே இருந்த உயர்கோபுர மின்விளக்கு கம்பம் அகற்றப்பட்டது. தற்போது, பணி நிறைவடைந்தும், மின்விளக்கு கம்பம் அமைக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக, இரவு நேரத்தில் அப்பகுதி வெளிச்சம் இன்றி இருளில் மூழ்கியுள்ளது. எனவே, அகற்றப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு கம்பத்தை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் நெடுஞ்சாலை துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.