உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம் ஒதப்பையில் போக்குவரத்து நெரிசல்

சாலை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம் ஒதப்பையில் போக்குவரத்து நெரிசல்

ஊத்துக்கோட்டை,கிராமத்திற்கு சாலை வசதி கேட்டு மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் ஒதப்பை கிராமம் உள்ளது. இங்கிருந்து, 1 கி.மீ.,யில் கொரக்கந்தண்டலம் கிராமம் உள்ளது. இங்கு, 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்வது. கொரக்கந்தண்டலம் கிராமத்தில் போதியளவில் சாலை வசதி இல்லை. இதனால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் அவதிப் படுகின்றனர். இப்பகுதியில் சாலை அமைத்து தர பூண்டி ஒன்றிய நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக மனு அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் மாணவர்கள், நேற்று காலை ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலையில், ஒதப்பை கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சாலையின் இரண்டு பக்கமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம், 'சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறினர். இதை தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !