பழவேற்காடில் காற்றில் விழுந்த மரம் வாகன ஓட்டிகள், பகுதி மக்கள் சிரமம்
பழவேற்காடு;பழவேற்காடில் ௧௦ நாட்களுக்கு முன் காற்றில் விழுந்த மரம் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால், பகுதிமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பழவேற்காடு பஜார் பகுதியில், 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு, மக்கள் சென்று வருவதற்கான நடைபாதையில் இருந்த பெரிய மரம் ஒன்று, 10 நாட்களுக்கு முன் வீசிய பலத்த காற்றில், வேருடன் பெயர்ந்து சாலையில் விழுந்தது. இந்த மரத்தால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதை தொடர்ந்து, நெடுஞ்சாலை துறையினர் அவற்றை அரைகுறையாக வெட்டி அகற்றினர். தற்போது, மரத்தின் கிளைகள் முழுமையாக அகற்றப்படாமல் நடைபாதையிலும்,சாலையோரத்திலும் கிடக்கின்றன. இந்த மரத்தால் பகுதிமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, உடனடியாக மரக்கிளைகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.