தொழிற்சாலையில் பேரல்கள் திருடிய இருவர் கைது
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாயகி, 33. இவர் இப்பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் இயங்கி வரும் கோகுல் டிரம்ஸ் மற்றும் பேரல் கம்பெனியில் பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.கம்பெனியில் வாசனை திரவியங்கள் அடைக்க பயன்படும் இரும்பு பேரல்களை கம்பெனியின் காம்பவுண்ட் அருகே குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் 21ம் தேதி சரிபார்க்கும் போது 5 பேரல்கள் மாயமானது தெரிந்தது. லோகநாயகி நேற்று முன்தினம் 5 பேரல்கள் மாயமானதாக கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தண்ணீர்குளத்தைச் சேர்ந்த செல்வகுமார், 37, மற்றும் குமரகுரு, 33 ஆகிய இருவரும் திருடியது தெரிந்தது.திருவள்ளூர் தாலுகா போலீசார் இருவரையும் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.