வாலிபர் மீது தாக்குதல் நடத்திய பா.ம.க.,வினர் இருவர் கைது
திருத்தணி: இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை, பா.ம.க., நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர் தாக்கினர். இது தொடர்பாக, நேற்று இருவரை போலீசார் கைது செய்து, 6 பேரை தேடி வருகின்றனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, நேற்று முன்தினம் வருகை தந்த பா.ம.க., பசுமை தாயகம் இயக்க தலைவர் சவுமியா, மூலவரை தரிசித்தார். பின், திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், மேட்டு தெருவில் உள்ள தளபதி கே.விநாயகம் திருவுருவச் சிலைக்கு, மலர் மாலை அணிவிக்க கட்சி நிர்வாகிகளுடன் வந்தார். அப்போது, ராணிப்பேட்டை மாவட்டம், கடவாரிகண்டிகையைச் சேர்ந்த மோகன்பாபு, 35, என்பவர், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பா.ம.க., நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர், மோகன்பாபுவை வழிவிடுமாறு மிரட்டி, சரமாரியாக தாக்கினர். அக்கம்பக்கத்தினர் மோகன்பாபுவை மீட்டனர். இதுகுறித்து, மோகன்பாபு அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, திருவாலங்காடு குப்பம்கண்டிகையைச் சேர்ந்த தமிழரசன், 35, அரக்கோணம் மோசூரைச் சேர்ந்த முரளி, 39, ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். மேலும், பா.ம.க.,வினர் ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.