/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இலவச வேட்டி, சேலையில் புதிய ரகம் தரம் உயர்வு:பள்ளிப்பட்டு நெசவாளர்கள் மகிழச்சி
இலவச வேட்டி, சேலையில் புதிய ரகம் தரம் உயர்வு:பள்ளிப்பட்டு நெசவாளர்கள் மகிழச்சி
பள்ளிப்பட்டு:பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலையின் தரம் உயர்த்தி தயாரிக்க கைத்தறி துறை சார்பில் கடந்த 1ம் தேதி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் வாயிலாக, வரும் பொங்கல் பண்டிகைக்கு அனைவரும் விரும்பி அணியும் விதமாக தரம் உயர்ந்த ரகத்தில் இலவச வேட்டி, சேலை ரகங்கள் வினியோகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை தாலுகாவில், 72 கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 3,500 நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
Galleryஇவர்கள், கைத்தறி மற்றும் பெடல் தறிகள் வாயிலாக, இலவச சேலைகள் உற்பத்தி செய்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில், இலவச சேலைகள் மட்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இலவச வேட்டி தயாரிப்பு இதர மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆண்டுதோறும் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள படி, சேலைகளை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றனர். ஆண்டுதோறும் இதற்கான உத்தரவு வழங்கப்படும். பருத்தி நுால் பாவு மற்றும் பாலியெஸ்டர் ஊடை பயன்படுத்தி சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது கைத்தறி துறை சார்பில் புதிய ரகத்தில் இலவச வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்ய அரசு 1ம் தேதி ஆணை பிறப்பித்துள்ளது. இந்த புதிய ரகம், 60 எண் கொண்ட, ‛பாலிகாட்' துணி ரகம் ஆகும். மேலும், இந்த நுால் ரகத்தில் அரசு சார்பில் சாயம் போட்டு, பசையும் சேர்த்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கூட்டுறவு சங்கங்கள் நேரடியாக ஆலைகளில் பாவு தயாரிக்க முடியும். சாயம் தோய்த்தல், நுால் நுாற்பது மற்றும் பசை சேர்க்கும் வேலை இனி கூட்டுறவு சங்கங்களுக்கு இல்லை. பளபளக்கும் ஜரிகை மேலும் இந்த புதிய ரகத்தில் தாமிரம் மற்றும் வெள்ளி நிறத்திலான சரிகைகள் பயன்படுத்தப்பட உள்ளன. இதனால், வேட்டி, சேலைகள் பளபளப்பாக மின்னும், மெல்லிய 60 எண் கொண்ட நுால் பயன்படுத்தப்படுவதால் எடை குறைவாகவும், உறுதியாகவும் இருக்கும். இலவச வேட்டி, சேலை என்றால் தரம் குறைவாக இருக்கும் என்ற எண்ணத்திற்கு எதிராக, இந்த புதிய ரக வேட்டி சேலைகள் அனைவரும் விரும்பி அணியும் விதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.விரைவில் கைத்தறி மற்றும் பெடல்தறிகளில் நெசவு துவங்கும். வரும் 2027 பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக வினியோகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து கைத்தறி கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛உயர் தரத்தில் இலவச வேட்டி, சேலை ரகங்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நெசவு செய்ய அரசு திட்டமிட்டு, அதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன. மேலும், நெசவாளர்கள் இருப்பு வைத்துள்ள பழைய ரக சேலைகளை கொள்முதல் செய்வது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்' என்றார். பசை சேர்ப்பு தொழிலாளர்கள் அதிருப்தி புதிய ரக வேட்டி, சேலை உற்பத்தியில் அரசு சார்பில் சாயம் தோய்த்து, பசையும் சேர்க்கப்பட்ட நுால் கண்டுகள் வழங்கப்பட உள்ளன. இதனால். ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி தாலுகாவில் நுாலுக்கு பசை சேர்க்கும் பணியில் பாரம்பரியமாக ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. மேலும், பாவு தயாரிக்கும் சிறிய ஆலைகளும் வேலை இழக்கும் நிலை உருவாகும், ஒரே கூரையின் கீழ் பாவு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பாவு உற்பத்தி செய்யப்படும் எனவும், சிறிய ரக பாவு தயாரிப்பாளர்கள் அச்சப்படுகின்றனர். பாவு தயாரிக்க, வீடுகளில் நுால் நுாற்கும் பெண்களுக்கும் இனி வேலை கிடைக்காது. நெசவாளர்கள் கோரிக்கை கைத்தறி மற்றும் பெடல் தறி நெசவாளர்கள், வழக்கமாக தயாரிக்கும் இலவச வேட்டி, சேலை ரகங்களை தங்களின் சொந்த விருப்பத்தின் படி, தங்களின் சேமிப்பில் இருந்து செலவிட்டு, ஓய்வு நேரத்தில் நெசவு செய்து இருப்பு வைத்திருப்பதும், அதை வேட்டி, சேலை தயாரிக்க உத்தரவு கிடைத்ததும் கூட்டுறவு சங்கங்களுக்கு ஒப்படைப்பதும் சுயமான முடிவின் படி நெசவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, திருவள்ளூர் மாவட்ட கைத்தறி கூட்டுறவு சங்க நெசவாளர்களிடம், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இலவச சேலைகள் தற்போது இருப்பு உள்ளது. இந்நிலையில், புதிய ரகத்தில் வேட்டி சேலை தயாரிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால், நெசவாளர்கள் சுயமாக தயாரித்து இருப்பு வைத்துள்ள சேலைகள் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நெசவாளர்களின் சொந்த சேமிப்பில் உற்பத்தி செய்து வைத்துள்ள, முந்தைய ரகத்தில் நெசவு செய்யப்பட்டுள்ள இலவச சேலைகளையும் அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.