திருத்தணியில் வைகாசி விசாகம் கோலாகலம்
திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலில் நேற்று வைகாசி விசாகம் ஒட்டி, மூலவருக்கு அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:00 மணிக்கு உற்சவர் சண்முக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், லட்சார்ச்சனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி - தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளி தேர்வீதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மதுரையில் வரும் 22ம் தேதி பா.ஜ., சார்பில் ஐந்து லட்சம் முருக பக்தர்கள் வேல் பூஜை நடத்தவுள்ளனர். இதற்காக ஆறுபடை முருகன் வீடுகளிலும், நேற்று வைகாசி விசாகத்தில் பா.ஜ.,வினர் வேல் பூஜை செய்து, வேல் மதுரைக்கு கொண்டு செல்கின்றனர். திருத்தணி நகர பா.ஜ., வினர் முருகன் கோவிலில், விநாயகர், சண்முகர், மூலவர், வள்ளி தெய்வானை மற்றும் உற்சவர் சன்னிதிகளில் வேல் வைத்து சிறப்பு பூஜை நடத்தி, மதுரைக்கு வேல் கொண்டு சென்றனர். கருட சேவை
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான கோட்ட ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் விஜயராகவ பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் திருத்தணி நகர மளிகை கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் கருடசேவை உத்சவம் வெகு விமரிசையாக நடந்து வருகிறது.நேற்று கருடசேவை விழா நடந்தது. காலை, 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் காலை, 8:00 மணிக்கு, கருட வாகனத்தில் உற்சவர் விஜயராகவ பெருமாள் எழுந்தருளி, திருத்தணி நகர முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.