சோழவரம் போலீஸ் நிலையத்தில் மட்கி வீணாகும் பறிமுதல் வாகனங்கள்
சோழவரம்:சோழவரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கையின்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.அதேபோன்று, விபத்து, கடத்தல், திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவை போலீசாரின் கட்டுப்பாட்டில் வைக்கப்படுகின்றன.இவ்வாறு நீதிமன்ற வழக்கு தொடர்புடைய, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சோழவரம் போலீஸ் நிலையத்தின் அருகில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.திறந்த வெளியில் உள்ள இவை, மழை, வெயிலில் பாழாகி கிடக்கின்றன. வாகனங்களை சுற்றிலும் செடி கொடிகள் சூழ்ந்து உள்ளன. குவித்து வைக்கப்பட்டு வாகனங்களில் உள்ள பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் தீ விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.போலீஸ் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை முறைபடுத்தி வைக்கவும், அங்குள்ள செடி கொடிகளை அகற்றவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாகனங்கள் மட்கி வீணாவதை தவிர்க்க, உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி அவ்வப்போது அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.