பாதி வழியில் நின்ற அரசு பஸ் வேலுார் சென்ற பயணியர் அவதி
திருத்தணி:திருத்தணியில் இருந்து வேலுார் நோக்கி சென்ற பேருந்து, திடீரென ஏற்பட்ட கோளாறால் பாதி வழியிலேயே நின்றது. இதனால், பயணியர் கடும் அவதிப்பட்டனர். திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து வேலுார் நோக்கி தடம் எண்: 777 என்ற அரசு பேருந்து, நேற்று காலை 30க்கும் மேற்பட்ட பயணியருடன் சென்று கொண்டிருந்தது. திருத்தணி அக்கைய நாயுடு சாலை அருகே சென்றபோது, பேருந்தின் முன்பகுதியில் உள்ள இரும்பு ராடு உடைந்ததால் சாலையிலே நின்றது. இதனால், கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதியடைந்தனர். பின், மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு பயணியர் சென்றனர். ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. போக்குவரத்து துறை அதிகாரிகள் அரசு பேருந்துகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.