உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் போராட்டம்

வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் போராட்டம்

சோழவரம்:ஒரக்காடில் நீண்டகாலமாக வசித்து வருவோருக்கு வீட்டுனை பட்டா வழங்காததால், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோழவரம் ஒன்றியம் ஒரக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கிருதலாபுரம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில், இப்பகுதிவாசிகள் விவசாயம் செய்து வந்தனர். தற்போது, அந்த நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. இதை தொடர்ந்து, பழங்குடியினருக்கு மேற்கண்ட அரசு நிலத்தில், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், வீட்டுமனை பட்டா வழங்க வருவாய்த் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக நிலத்தை சமன்படுத்தி, அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு கிருதலாபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிருதலாபுரம் கிராமத்தில் வீடு இல்லாதவர்களுக்கு, மேற்கண்ட நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனக்கூறி, நேற்று அளவீடு பணிகளை மேற்கொண்ட அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். 'எங்கள் கிராமத்தில் வீடு இல்லாமல் பல குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், வெளியூர் மக்களை குடியமர்த்தும் போது, இங்குள்ளவர்கள் வீட்டுமனைக்காக வேறு கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்' என, கிராம மக்கள் அதிருப்தியுடன் தெரிவித்தனர். கிருதலாபுரம் கிராமத்தில் வசிக்கும் வீடு இல்லாதவர்களுக்கு, வீட்டுமனை பட்டா வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தினர். அதிகாரிகள் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாலை வரை காத்திருந்து பின் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ