மின்சார ரயிலில் சாகசம் செய்த கல்லுாரி மாணவருக்கு எச்சரிக்கை
திருவள்ளூர்:திருவள்ளூரிலிருந்து சென்னை செல்லும் புறநகர் மின்சார ரயிலில் சாகசம் செய்த கல்லுாரி மாணவரை, ரயில்வே போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். சென்னை சென்ட்ரல் செல்லும் புறநகர் மின்சார ரயிலில், கடந்த 6ம் தேதி, வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில், பயணியரை அச்சுறுத்தும் வகையிலும், உயிருக்கு ஆபத்தான நிலையிலும் கல்லுாரி மாணவர்கள் சிலர் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். நடைமேடையில் கால்களை தேய்த்தவாறும், ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கியவாறும், சாகச ரயில் பயணத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வெளியான வீடியோ பதிவை வைத்து, திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், ஓடும் ரயிலில் சாகசத்தில் ஈடுபட்ட சென்னை, பச்சையப்பன் கல்லுாரி இரண்டாமாண்டு மாணவர், அரண்வாயல் பகுதியைச் சேர்ந்த கோபிநாத், 21, என்பவரை பிடித்த போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். தொடர்ந்து, மாணவரின் பெற்றோரையும் வரவழைத்து, 'வரும் காலங்களில், இதுபோன்று சாகசத்தில் ஈடுபட்டால் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்து அனுப்பினர். மேலும், அவருடன் சாகசத்தில் ஈடுபட்ட மற்ற மாணவர்களை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.