உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மூன்று நாகலிங்க மரங்களை இடம் மாற்றுவது எப்போது?

 மூன்று நாகலிங்க மரங்களை இடம் மாற்றுவது எப்போது?

கும்மிடிப்பூண்டி: நெடுஞ்சாலை துறை உறுதி அளித்து எட்டு மாதங்களான நிலையில், தற்போது வரை மூன்று நாகலிங்க மரங்களும் இடமாற்றம் செய்யப்படாமல் உள்ளது. எனவே, உடனே மரங்களை இடமாற்ற செய்ய வேண்டும் என, ஈகுவார்பாளையம் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இயற்கையிலேயே நாகலிங்கத்தை போன்ற வடிவம் உடைய பூக்களாக இருப்பதால், நாகலிங்க பூ எனவும், அதன் மரம் நாகலிங்க மரம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த மரம் 25 - 35 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. மேலும், மருத்துவ குணம் கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சிவாலயங்களில் மட்டுமே இந்த வகை மரங்கள் அபூர்வமாக காணப்படுகிறது. கும்மிடிப்பூண்டி - மாதர்பாக்கம் நெடுஞ்சாலையோரம், ஈகுவார்பாளையம் கிராமத்தில் மூன்று நாகலிங்க மரங்கள் உள்ளன. நுாறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த மரங்கள், அப்பகுதி மக்களால் பெரிதும் போற்றப்படுகிறது. கும்மிடிப்பூண்டி - மாதர்பாக்கம் சாலையில், ஈகுவார்பாளையம் மேடு - மாதர்பாக்கம் வரை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளை, மாநில நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த மூன்று நாகலிங்க மரங்களை அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த மரங்களை வெட்டாமல், அதே கிராமத்தில் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு ஒப்புதல் தெரிவித்த நெடுஞ்சாலை துறையினர், வேறு இடத்திற்கு மாற்றப்படும் என, எட்டு மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தனர். ஆனால், தற்போது வரை இந்த மரங்கள் இடம் மாற்றப்படவில்லை. சாலை பணிகளை விரைந்து முடிக்கும் அவசரத்தில், மரங்களை இடம் மாற்ற நேரமின்றி அகற்றப்படுமோ என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர். எனவே, மரங்களை வேறு இடத்திற்கு மாற்றும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ