உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொதட்டூர் காவல் நிலைய எல்லைக்குள் பள்ளிப்பட்டு தாலுகா முழுதும் வருமா? பகுதி மக்கள் எதிர்பார்ப்பு

பொதட்டூர் காவல் நிலைய எல்லைக்குள் பள்ளிப்பட்டு தாலுகா முழுதும் வருமா? பகுதி மக்கள் எதிர்பார்ப்பு

பள்ளிப்பட்டு:பொதட்டூர்பேட்டை காவல் நிலைய கட்டுப்பாட்டின் கீழ் பள்ளிப்பட்டு தாலுகா முழுதையும் கொண்டு வர வேண்டும் என, பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தின் கீழ் ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை காவல் நிலையங்கள் செயல்பட்டு வந்தன. இதில், ஆர்.கே.பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளும், பள்ளிப்பட்டு தாலுகாவிற்கு உட்பட்ட 33 ஊராட்சிகளும் என 71 ஊராட்சிகளும் கண்காணிக்கப்பட்டு வந்தன. சமீபத்தில், பள்ளிப்பட்டு தாலுகாவிற்கு உட்பட்ட பொதட்டூர்பேட்டை, 'டி6' காவல் நிலையம் தரம் உயர்த்தப்பட்டு, புதிதாக இன்ஸ்பெக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆர்.கே.பேட்டையின் 38 ஊராட்சிகளுக்கு ஒரு காவல் நிலையம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. பள்ளிப்பட்டின் 33 ஊராட்சிகளுக்கு பள்ளிப்பட்டு, 'டி5' பொதட்டூர்பேட்டை 'டி6' என இரண்டு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதிலும், தற்போது 17 ஊராட்சிகளும் உள்ளிடக்கிய பொதட்டூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரின் எல்லை அமைந்துள்ளது. பள்ளிப்பட்டு தாலுகாவின் 33 ஊராட்சிகளுக்கும் ஒட்டு மொத்தமாக பொதட்டூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரின் அதிகார எல்லையை விஸ்தரிக்க வேண்டும் என பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பொதட்டூர்பேட்டைக்கு முன்பாகவே பள்ளிப்பட்டு காவல் நிலையம் துவங்கப்பட்டது. தற்போது ஆர்.கே.பேட்டை காவல் நிலைய ஆய்வாளரின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிப்பட்டு காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டுமானால், பொதட்டூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணமராஜகுப்பம், கொடிவலசா உள்ளிட்ட ஊராட்சிகளை கடந்து தான் செல்ல வேண்டும். ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் இருந்து பள்ளிப்பட்டு காவல் நிலையம், 24 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து பள்ளிப்பட்டு காவல் நிலையம் 7 கி.மீ., துாரத்திலேயே அமைந்துள்ளது. பள்ளிப்பட்டு காவல் நிலைய எல்லையின் மேற்கு, கிழக்கு, வடக்கு பகுதியில் ஆந்திர மாநில எல்லை அமைந்துள்ளது. மாநில எல்லையில் கடத்தல் சம்பவங்களை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் பள்ளிப்பட்டு காவல் நிலையத்திற்கு உள்ளது. எனவே அருகில் உள்ள பொதட்டூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளரின் கட்டுப்பாட்டின் கீழ், பள்ளிப்பட்டு காவல் நிலையத்தையும் கொண்டு வர வேண்டியது அவசியம் ஆகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை