ராஜாநகரம் ஏரிக்கரையில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து, பள்ளிப்பட்டு செல்லும் சாலையில் ராஜாநகரம் ஏரிக்கரை அமைந்துள்ளது. ஏரிக்கரை மீதாக, ஒன்றரை கி.மீ., துாரத்திற்கு தார் சாலை விஸ்தீரணமாக போடப்பட்டுள்ளது.ஐந்து ஆண்டுகளாக இந்த ஏரி தண்ணீர் நிரம்பியே காணப்படுகிறது. ஆந்திர மாநிலம், பாலசமுத்திரம் பகுதியில் இருந்து இந்த ஏரிக்கு நீர்வரத்து உள்ளதே இதன் சிறப்பு. ஆந்திராவில் இருந்து கிடைக்கும் தண்ணீர் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறி தான்.இந்த ஏரிக்கரையில், ஏராளமான சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. சீமை கருவேல மரங்கள், தண்ணீரை உறிஞ்சி ஆவியாக மாற்றுவதில் திறம்பட செயல்படும் சக்தி கொண்டவை. இந்த சீமை கருவேல மரங்களை அழிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.ராஜாநகரம் ஏரிக்கரையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அடியோடு வெட்டி அகற்ற வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், ஏரிக்கரை மீதான சாலை திருப்பங்களில் எதிரில் வரும் வாகனங்களை மறைக்கும் விதமாக, இந்த சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.