உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மூதாட்டியை தாக்கி பணம், நகை கொள்ளை: இளம்பெண்ணுக்கு சிறை

மூதாட்டியை தாக்கி பணம், நகை கொள்ளை: இளம்பெண்ணுக்கு சிறை

கும்மிடிப்பூண்டி;கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டியை தாக்கி நடந்த கொள்ளை சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து, கொள்ளை போன நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் தனியாக வசித்து வருபவர் ராஜேஸ்வரி, 87. கடந்த 11ம் தேதி மதியம் வீடு புகுந்த மர்ம நபர், மூதாட்டியை தலையில் தாக்கி, இரு பீரோக்களில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றார். தலையில் பலத்த காயமடைந்த மூதாட்டி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, உறவினர்கள் முன்னிலையில், கொள்ளை நடந்த வீட்டில் நடத்திய சோதனையில், மூட்டைகளாக கட்டப்பட்டிருந்த, 85.60 லட்சம் ரூபாய் கண்டெடுக்கப் பட்டது. இந்நிலையில், கொள்ளையில் ஈடுபட்ட புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த நவீன் மனைவி சுப்பிரியா, 20, என்பவரை நேற்று போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: மூதாட்டியுடன் நெருங்கிய தொடர்பில் சுப்பிரியா இருந்துள்ளார். சம்பவம் நடந்த போது, மூதாட்டியிடம் கடனாக பணம் கேட்க சென்றார். பணம் தரமறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மூதாட்டியை தள்ளியபோது, அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். அப்போது, இரு பீரோக்களில் இருந்த 1.80 லட்சம் ரூபாய் மற்றும் 20 சவரன் நகைகளை, சுப்பிரியா கொள்ளை யடித்து சென்றார். இவ்வாறு அவர்கள் கூறினர். கைதான சுப்பிரியா விடம், பணம் மற்றும் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி