திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டையில் நாளை (10ம் தேதி) நடக்கவிருக்கும் விநாயகர் ஊர்வலப் பாதைகளை, திருச்சி மண்டல ஐ.ஜி., மஹாலி ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா முத்துப்பேட்டையில், ஜாம்பவான் ஓடை வடகாடு, கல்லடிக்கொல்லை, தில்லைவிளாகம், ஆலங்காடு, செம்படவன் காடு உள்ளிட்ட 16 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நாளை (10ம் தேதி) மாலை மூன்று மணிக்கு, முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை வடகாடு சிவன் கோவிலில் இருந்து, ஜாம்பவான் ஓடை தர்கா, ஆஸாத் நகர், பழைய பஸ்ஸ்டாண்ட் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோரையாற்றில் கரைக்கப்படவிருக்கிறது. ஊர்வலத்தை கர்நாடகாவை சேர்ந்த ஸ்வாமி கணேஷ் கிரிமஹாராஜ் முன்னிலையில், சக்தி ராம சிதம்பரத்தேவர் துவங்கி வைக்கிறார். பா.ஜ., மாநிலச் செயலாளர் முருகானந்தம், முத்துப்பேட்டை ஒன்றியத் தலைவர் ராமலிங்கம், நகரத்தலைவர் மாரிமுத்து மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் பங்கேற்கின்றனர். ஊர்வலத்தை அமைதியாக நடத்த, திருவாரூர் கலெக்டர் முனியநாதன், திருச்சி மண்டல ஐ.ஜி., மஹாலி, தஞ்சை டி.ஐ.ஜி., ரவிக்குமார், திருவாரூர் எஸ்.பி., சேவியர் தன்ராஜ் தலைமையில் அனைத்துக் கட்சியினருடன் மூன்று முறை கூட்டங்கள் நடத்தப்பட்டு, அறிவுரைகள் வழங்கப்பட்டன. பாதுகாப்புப்பணியில் 2,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதட்டம் மிகுந்த இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வன்முறை, அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க, தொடர் கண்காணிப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதைகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்சி மண்டல ஐ.ஜி., மஹாலி, தஞ்சை டி.ஐ.ஜி., ரவிக்குமார் நேற்று ஆய்வு செய்தனர். ஊர்வலம் அமைதியாக நடப்பதற்குரிய ஆலோசனைகளை போலீஸாருக்கு வழங்கினர்.