| ADDED : செப் 13, 2011 12:48 AM
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை வழங்கும்
திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கலெக்டர் முனியநாதன் ஆணைகள் வழங்கினார்.
தமிழக முதல்வர் முதியோர் நலன் காத்திட வழங்கப்பட்டு வரும் முதியோர்
உதவித்தொகையினை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு
வருகிறது.இதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு
தகுதியானவர்களில் முதற்கட்டமாக 1,211 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான
ஆணை வழங்கும் விழா திருவாரூர் கலெக்டரக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர்
முனியநாதன் தலைமையில் நடந்தது. விழாவில், கலெக்டர் பேசியதாவது: தமிழக
முதல்வர் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் முதியோர்களுக்கு வழங்கும் மாதாந்திர
உதவித்தொகையினை 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்.
அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள்
மூலம் 48 ஆயிரம் மனுக்கள் முதியோர்களிடமிருந்து வரப்பெற்றது. இதில்,
தகுதியான நபர்களை தேர்வு செய்து படிப்படியாக மாதாந்திர உதவித்தொகை
வழங்கப்பட உள்ளது. இவ்வாறு கலெக்டர் முனியநாதன் பேசினார். விழாவில்,
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர்
துரைபாண்டியன் பங்கேற்றனர்.