உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / "பாஸ்ட் புட் உணவு வியாதியை ஏற்படுத்தும் இயற்கை வேளாண் விஞ்ஞானி எச்சரிக்கை

"பாஸ்ட் புட் உணவு வியாதியை ஏற்படுத்தும் இயற்கை வேளாண் விஞ்ஞானி எச்சரிக்கை

திருத்துறைப்பூண்டி: ''பாஸ்ட் புட் என்ற பெயரில் பன்னாட்டு கம்பெனிகளில் உணவு வகைகளை உண்ணுவதை கவுரவமாக பார்க்கின்றனர். அதனுடைய விளைவு பாதிப்புகள் எல்லாம் இப்போது புற்று நோயாகவும், பெயர் சொல்ல முடியாத வகையில் பல வியாதிகளை ஏற்படுத்தி வருகிறது,'' என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார். திருத்துறைப்பூண்டியில் கிரியேட் பயிற்சி மையம் ஜே.சி.ஸ்., சங்கம் சார்பில், பாரம்பரிய உணவு திருவிழா கருத்தரங்கம், கண்காட்சி இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் நடந்தது.பேராசிரியர் பிறை அறிவழகன் ஜே.சி.ஸ்., மண்டல தலைவர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஜே.சி.ஸ்., ஸ்ரீதரன் வரவேரற்றார். நமது நெல்லை காப்போம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், திருவாரூர் நபார்டு வங்கி பொது மேலாளர் ரவிசங்கர், விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் சேரன், கட்டிமேடு நுகர்வோர் குழு தலைவர் அப்துல்ரகுமான் ஆகியோர் பாரம்பரிய உணவு வகைகள் குறித்து பேசினர். விழாவில் தலைமை வகித்து நம்மாழ்வார் பேசியதாவது: பாரம்பரிய உணவு வயிற்றுக்காக மட்டும் சாப்பிடுவது அல்ல. அது சத்தானதாகவும், உடலுக்கு வலுவானதாகவும், ஆரோக்கியமானதாகவும் உள்ளது. நம்முடைய பாரம்பரிய நெல் ரகங்களில் செய்யப்படும் எல்லா உணவுகளுமே ருசியாகவும் உள்ளது. துரித வகை பாஸ்ட் புட் உணவு வகைகள் உலக நாடுகளில் பல தடை செய்யப்பட்ட அஜினோமோட்டோவை கலந்து உணவு தயாரிக்கின்றனர். இதனுடைய தீமையை கிராம மக்களை விட நகர மக்களுக்கு தெரியாமல் பாஸ்ட் புட் உணவு வகைகளை உண்டு வருகின்றனர்.இது ஆரோக்கியமானது அல்ல. மாப்பிள்ளை சம்பா அரிசியை வடித்து அதில் தண்ணீர் ஊற்றி வைத்து மறுநாள் காலையில் ஏழு மணிக்கு ஒரு சொம்பு அந்த தண்ணீரை குடித்து விட்டு 11 மணியளவில் பழைய சாதத்தை சாõப்பிட்டால் மாலை ஆறு மணி வரை களைப்பு இல்லாமல் வேலை செய்யலாம். தொழிலாளர்கள் இயற்கை உணவு வகைகளை நாம் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தோடு வாழ நமக்கு நாமே வழி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார். பாரம்பரிய உணவு திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட வகைகளில் பலகாரங்கள் செய்து வந்து 70 பெண்கள் பங்கேற்றனர். இதில், முதல் மூன்று இடங்களை பெற்ற ஒன்பது பேருக்கு பரிசுகளும், இதில், பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் மூலிகை கண்காட்சி பாரம்பரிய காய்கறி விதைகள் பாரம்பரிய அரிசி வகைகள் இடம் பெற்றிருந்தது. விழா ஏற்பாடுகளை கிரியேட் தமிழ்நாடு ஜே.சி.ஸ்., ஜி.டி பவுண்டேசன், ரெயின்போ டிரஸ்ட், ஒற்றுமை அறக்கட்டளை, வேவ்ஸ் பவுண்டேசன், பெட்காட் ஆகியவை செய்திருந்தனர். விதை வங்கி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ