இரட்டிப்பு பண ஆசையில் ரூ.23 லட்சம் போச்சு
திருவாரூர்:பெண்ணிடம், நுாதன முறையில், 23 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணிகண்டன்; ஐ.டி., ஊழியர். திருவாரூரில் வீடு கட்டுவதற்காக, மனைவி புவனேஸ்வரி, 34, பெயரில், பல வங்கி கணக்கில் பணம் டிபாசிட் செய்து வந்தார். இந்நிலையில், 'வாட்ஸாப்' மூலம், புவனேஸ்வரியை தொடர்புகொண்ட மர்ம நபர்கள், பல தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்தால், இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என, ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய புவனேஸ்வரி, பிப்., 19ம் தேதி முதல், மர்ம நபர்கள் கூறியபடி, பல வங்கி கணக்குகளுக்கு, 23 லட்சத்து, 15,676 ரூபாயை அனுப்பியுள்ளார். பணத்தை திருப்பி கேட்க முயன்றபோது, மர்ம நபர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. புவனேஸ்வரி புகாரின்படி, திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.