| ADDED : ஆக 30, 2011 12:02 AM
திருவாரூர்: திருவாரூர் அருகே வீடு புகுந்து தாய், மகனை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் சேலத்தை சேர்ந்த ஏழு பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை திருவாரூர் சப்கோர்ட்டில் வழங்கப்பட்டது. திருவாரூர் அருகே ஆண்டிப்பாளையத்தில் வசித்து வருபவர் முருகேசன். இவர் அரசு பஸ்ஸில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். கடந்தாண்டு ஜனவரி 25ம் தேதி இவரது வீட்டில் மனைவி மலர்விழியும், மகன் கார்த்திக்கும் தனியாக இருந்தனர். அப்போது, இரவு 10 மணியளவில் டாடா சுமோவில் வந்த ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து இருவரையும் தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.இதுதொடர்பாக திருவாரூர் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து சேலம் மாவட்டம், கருமந்துறை காட்டுக்கொட்கை மேலவீதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு ராஜேந்திரன் என்பவர் மகன் ஹரிகிருஷ்ணன் (30). அதேபகுதியை சேர்ந்த பாலமுருகன் (24), ராஜ்கமல் (20), சந்தோஷ்குமார் (20), அருண்ராஜ் (21), சிவானந்தம் (21), கோவிந்தராஜ் (21) ஆகிய ஏழு பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் வழிப்பறிக்கு பயன்படுத்திய வெள்ளை நிற டாடா சுமோ ஜீப் ஒன்றும், கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளையும் கைப்பற்றி இதுதொடர்பாக திருவாரூர் சப்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நேற்று மாலை நடந்தது. இதில், குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேருக்கும் தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் உத்தரவிட்டார். அபராதத் தொகை கட்டத்தவறினால் மேலும், ஆறு மாத சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் சரவண செல்வன் வாதாடினார். குற்றவாளிகள் ஏழு பேர்களையும் திருவாரூர் தாலுகா இன்ஸ்பெக்டர் குருசாமி மற்றும் போலீஸார் திருச்சி மத்திய சிறையில் கொண்டுச் சென்று அடைத்தனர். இவ்வழக்கில் முதல் குற்றவாளியான ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு ராஜேந்திரனின் மற்றொரு மகன் பன்னீர்செல்வம் என்பவர் தலைமறைவாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.