திருச்செந்துார் கோவிலில் விரைவில் பிரேக் தரிசனம் எனும் சிறப்பு தரிசனம்
துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய, 'பிரேக்' தரிசனம் எனும் சிறப்பு தரிசன திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை நாட்கள், திருவிழா நாட்களில், ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்யும் நிலை உள்ளது. இதனால், பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய, 'பிரேக்' தரிசனம் திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவில் தக்கார் அருள்முருகன், இணை கமிஷனர் ஞானசேகரன் ஆகியோர் கூறியிருப்பதாவது: பக்தர்கள் அதிகமாக வரும் கோவில்களில், தினமும் ஒரு மணி நேரம் இடைநிறுத்தம் தரிசனம் ஏற்படுத்தப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதை செயல்படுத்தும் வகையில், திருச்செந்துார் சுப்பிர மணிய சுவாமி கோவிலில், திருவிழா நாட்கள், விசேஷ நாட்களை தவிர்த்து, தினமும் பிற்பகல் 3:00 முதல், 4:00 மணி வரை, தரிசனம் செய்யும் அனைவரும், தலா 500 ரூபாய் கட்டணம் செலுத்தி பிரேக் தரிசனம் செய்யும் நடைமுறையை கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது. தைப்பூசம், மாசி திருவிழா, பங்குனி உத்திரம், சித்திரை வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆவணி திருவிழா, நவராத்திரி உத்சவம், கந்த சஷ்டி மற்றும் மாதத்தில் பவுர்ணமி நாட்கள் தவிர பிரேக் தரிசனம் நடைமுறையில் இருக்கும். இது தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், எழுத்துப்பூர்வமாக கோவில் இணை கமிஷனரிடம் தெரிவிக்கலாம். அஞ்சலில் அனுப்புவோர் வரும் 11ம் தேதி 9:00 மணிக்கு, கோவில் அலுவலகத்தில் கிடைக்கும்படி ஆட்சேபனைகளை அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.