உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / அ.தி.மு.க., பிரமுகரை கடத்தி ரூ.5 கோடி கேட்டு சித்ரவதை பெண்ணுடன் நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்

அ.தி.மு.க., பிரமுகரை கடத்தி ரூ.5 கோடி கேட்டு சித்ரவதை பெண்ணுடன் நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்

துாத்துக்குடி: அ.தி.மு.க., பிரமுகரை கடத்தி, 5 கோடி ரூபாய் கேட்டு சித்ரவதை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே வாத்தியார்குடியிருப்பை சேர்ந்தவர் குணசேகரன், 55; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அ.தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளராகவும், தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலராகவும் உள்ளார். அக்., 7ம் தேதி மீளவிட்டான் அருகே பைக்கில் சென்றபோது, காரில் வந்த கும்பல் குணசேகரனை கடத்தியது. அவரது கண்களை கருப்பு துணியால் கட்டியபடி, குரும்பூர் தேரிக்காடு சென்ற கும்பல் அவரிடம், 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியது. அப்போது, '50 லட்சம் ரூபாய் கொடுத்து ஒருவர் உங்களை கொலை செய்ய கூறினர். 5 கோடி ரூபாய் கொடுத்தால் உயிருடன் விட்டுவிடுகிறோம்' என, அந்த கும்பல் கூறியுள்ளது. தேரிக்காட்டு மண்ணில் கழுத்தளவுக்கு அவரை புதைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். துப்பாக்கியை வைத்தும் மிரட்டி உள்ளனர். அப்போது, 1 கோடி ரூபாய் தருவதாக கடத்தல் கும்பலிடம் குணசேகரன் கூறியதை தொடர்ந்து, அவரை மண்ணில் இருந்து வெளியே எடுத்துள்ளனர். நண்பர்கள் சிலரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு குணசேகரன் பணம் கேட்டுள்ளார். யாரும் கொடுக்க முன்வராததால், ஏமாற்றமடைந்த கடத்தல் கும்பல் அவரை தாக்கியுள்ளது. பின்னர், குணசேகரனை காரில் துாத்துக்குடி மீளவிட்டான் காட்டு பகுதிக்கு அழைத்து சென்று நிர்வாணமாக்கி வீடியோ எடுத்துள்ளனர். பெண் ஒருவரை அவருடன் இருக்க செய்து, ஆபாசமாக போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். இரண்டு நாட்களுக்குள் பணம் கொடுக்காவிட்டால் நிர்வாண வீடியோக்களையும், போட்டோக்களையும் வெளியிட்டுவிடுவதாக மிரட்டிய கடத்தல் கும்பல் அவரை விடுவித்துள்ளது. இதுகுறித்து, குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் குணசேகரன் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை