கட்டட தொழிலாளி வெட்டிக்கொலை
துாத்துக்குடி:துாத்துக்குடி அருகே கூட்டாம்புளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் வெள்ளைக்கண்ணு, 24; கட்டட தொழிலாளி. நேற்று பகல், 10:00 மணியளவில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த நான்கு பேர், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.தடுக்க முயன்ற வெள்ளைக்கண்ணுவின் தம்பி கற்குவேலுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.சம்பவம் குறித்து, புதுக்கோட்டை போலீசார் கூறியதாவது:வெள்ளைக்கண்ணு உட்பட சிலர், போடம்மாமாள்புரத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரை, செப்டம்பரில் அரிவாளால் வெட்டினர். அந்த வழக்கில் வெள்ளைக்கண்ணு உட்பட ஒன்பது பேர் கைதாகி, சில நாட்களில் ஜாமினில் வெளியே வந்தனர்.இந்நிலையில், ராஜேஷின் நண்பரான ராஜ்குமார் உட்பட மூவர், நேற்று வெள்ளைக்கண்ணுவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். அவர்களை தேடி வருகிறோம். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கூட்டாம்புளி மற்றும் போடம்மாள்புரம் கிராமங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.