சமையல் எண்ணெய் இறக்குமதியில் துாத்துக்குடி துறைமுகம் சாதனை
துாத்துக்குடி: துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நிலக்கரி, சுண்ணாம்பு கல், சமையல் எண்ணெய் இறக்குமதி, காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்கள், உரம் ஏற்றுமதியில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது.நடப்பு நிதியாண்டு டிசம்பர் வரை, 3 லட்சத்து 73,393 டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்து சாதனை படைத்துள்ளது.இதில், 2 லட்சத்து 97,132 டன் பாமாயில் மற்றும் 76,261 டன் சூரியகாந்தி எண்ணெய் அடங்கும்.முந்தைய நிதியாண்டு டிசம்பர் வரை, 3 லட்சத்து 9,229 டன் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. தற்போது, 20.75 சதவீதம் அதிகம் கையாண்டு சாதனை படைத்துள்ளது.துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோகித் அறிக்கை:காளீஸ்வரி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சுத்திகரிப்பு ஆலை மற்றும் சேமிப்பு தொட்டி அமைக்க துறைமுகத்தில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வளாகத்தில் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரியகாந்தி எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு, சேமித்து பல்வேறு இடங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.கே.டி.வி., ஹெல்த் புட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் எண்ணெய் சேமிக்க நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியா மற்றும் மலேஷியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு சேமிக்கப்படும் பாமாயில் சிப்காட் பகுதியில் உள்ள ஆலையில் சுத்திகரிக்கப்பட்டு, உள்நாட்டு பயன்பாட்டிற்காக வினியோகிக்கப்படுகிறது.இவ்வாறு கூறியுள்ளார்.