உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திடீரென சரிந்த மின் கம்பங்கள் மின்சாரம் பாய்ந்து பெண் காயம்

திடீரென சரிந்த மின் கம்பங்கள் மின்சாரம் பாய்ந்து பெண் காயம்

துாத்துக்குடி:துாத்துக்குடி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் தேன்மொழி, 30. இவர், நேற்று அப்பகுதியில் உள்ள ஸ்டெம் பார்க் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது, திடீரென சாலையோரத்தில் அடுத்தடுத்து இருந்த மூன்று மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன.அதிர்ச்சியடைந்த தேன்மொழி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் தேன்மொழியின் கழுத்து பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. பைக்கில் பின்னால் இருந்த மாலா, 31, என்பவர் காயமின்றி தப்பினார்.சரிந்த மின்கம்பங்களில் இருந்த ஒயர்களில் மின்சாரம் இருந்ததால், அப்பகுதியில் திரண்டவர்கள், யாரையும் அந்த வழியாக செல்ல அனுமதிக்காததால், பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின், மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்து, கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மக்கள் கூறியதாவது:துாத்துக்குடி மாவட்டத்தில் சமீப காலமாக மின்கம்பங்கள் முறிந்து விழும் சம்பவம் அதிகரித்துள்ளது. தரமில்லாத கம்பிகளை பயன்படுத்தி மின்கம்பங்கள் தயாரிக்கப்படுவதே இதற்கு காரணம். துாத்துக்குடி காமராஜ்நகர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய பகுதிகளில், சில மாதங்களுக்கு முன் இதேபோன்று மின்கம்பங்கள் பாதியாக முறிந்து விழுந்தன.அம்பேத்கர் நகரில் மின்கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் இருப்பதாக, மின்வாரியத்திற்கு பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகள் பழுதான மின்கம்பங்களை உடனே சீரமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை