உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஜாமினில் வந்த வாலிபர் பழிக்குப்பழியாக கொலை

ஜாமினில் வந்த வாலிபர் பழிக்குப்பழியாக கொலை

துாத்துக்குடி:கொலை வழக்கில் ஜாமினில் வந்தவரை நான்கு பேர் கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்தது. துாத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே தாமரைமொழி கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி சிவசூரியன், 32. இவரது சகோதரி கணவரான கந்தையா, 48 என்பவரை குடும்ப தகராறு காரணமாக ஜூலை மாதம் வெட்டி கொலை செய்தார். தட்டார்மடம் போலீசார் சிவசூரியனை சிறையில் அடைத்தனர். நிபந்தனை ஜாமினில் நேற்று முன்தினம் வெளியே வந்த சிவசூரியன், நேற்று காலை தன் சகோதரர் சின்னதுரை, 43, என்பவருடன் பைக்கில் தட்டார்மடம் போலீஸ் ஸ்டேஷன் சென்று கையெழுத்து போட சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மெஞ்ஞானபுரம், அந்தோணியார் கெபி அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார், டூ - வீலர் மீது மோதியது. இதில், இருவரும் கீழே விழுந்தனர். சிவசூரியனை நான்கு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் துரத்திச் சென்று அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்குள் வைத்து சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே சிவசூரியன் உயிரிழந்தார். சின்னதுரைக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மெஞ்ஞானபுரம் போலீசார் சின்னதுரையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலை தொடர்பாக, நடுவக்குறிச்சியைச் சேர்ந்த ஆறுமுகம், 52, கார்த்திக், 26, முத்துபாண்டி, 32, மற்றொரு கார்த்தி, 25, ஆகிய நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், ஆறுமுகம் என்பவர் சிவசூரியனால் கொலை செய்யப்பட்ட கந்தையாவின் உடன் பிறந்த சகோதரர். கந்தையாவின் கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் சிவசூரியன் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை