உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மறியல் : போக்குவரத்து கடும் பாதிப்பு; பயணிகள் அவதி

அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் மறியல் : போக்குவரத்து கடும் பாதிப்பு; பயணிகள் அவதி

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரங்கநாதபுரம் முதல் வீதியில் ரோடு போடாததை கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள், நேற்று கொளுத்தும் வெயிலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரம்போக்குவரத்து பாதிக்கப்பட்டது; பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 11 மற்றும் 12வது வார்டுகளை உள்ளடக்கிய பகுதி ரங்கநாதபுரம் முதல் வீதி. இப்பகுதியில் ஏராளமான குடி யிருப்புகள் உள்ளன. ஒரு பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பிரதான வீதியில் தார் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என்று நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட வழித்தடம் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், தார் சாலை அமைக்கும் பணி துவங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து கடந்த முதல் தேதி, திருப்பூர் ஆர்.டி.ஓ., முன்னிலையில் வருவாய்த்துறை, நில அளவைத்துறை மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, தார் ரோடு போடும் பணியை செய்வதாக மாநகராட்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் பெயரில், கடந்த 5ம் தேதியிட்டு அனுப்பிய கடிதத்தில், சம்பந்தப்பட்ட இடம் குறித்து போலீஸ் ஸ்டே ஷனில் உள்ள புகார் மீது ஆர்.டி.ஓ., விசாரணை முடிந்த பின்பே, ரோடு போடும் பணியை துவக்க பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், நேற்று பகல் 12.00 மணியளவில் ஆர்.டி.ஓ.,விடம் விவரம் கேட்டனர். அக்கடிதம் குறித்து தனக்கு எந்த தகவலும் தெரியாது என்று தெரிவித்துள்ளார். மாநகராட்சி உதவி பொறியாளர் கவுரி சங்கரை, பொதுமக்கள் ஆர்.டி.ஓ., விடம் அழைத்து வந்தனர். அலுவலக காம்பவுண்ட் வரை வந்தவர், உள்ளே வராமல் திரும்பிச் சென்று விட்டார். ஆவேசமடைந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள பெண்களை திரட்டி வந்தனர். பகல் 2.00 மணியளவில் புது மார்க்கெட் வீதி, மங்கலம் ரோடு பகுதிகளில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். சில பெண்கள் கைக்குழந்தைகளுடன் கொளுத்தும் வெயிலில் ரோட்டில் அமர்ந்தனர். அங்கிருந்த ஒரு போலீஸ்காரரால் எதுவும் செய்ய முடியவில்லை. தகவல் அறிந்து ரோந்து மற்றும் போக்குவரத்து போலீசார் விரைந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேசினர்; கைது செய்வோம் என்று எச்சரித்தும் அவர்கள் மசியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து உறுதியான தீர்வு கிடைத்தால் மட்டுமே மறியல் கைவிடப்படும் என உறுதிபட தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி பொறியாளர் தமிழ்செல்வன், உதவி செயற்பொறியாளர் வாசு குமார், உதவி பொறியாளர் கவுரிசங்கர் ஆகியோர் சமாதானம் செய்தனர்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின், பிற்பகல் 3.00 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. இம்மறியல் போராட்டத்தால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் தவிப்பு: பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புது மார்க்கெட் வீதி வழியாக வந்த பஸ்களும், மங்கலம் ரோடு வழியாகச் செல்லும் வாகனங்களும், இம்மறியல் போராட் டம் காரணமாக நிறுத்தப்பட்டன. பயணிகள் நெரிசல், கொளுத்திய வெயில் மற்றும் வெப்பம் காரணமாக பஸ்களில் இருந்த பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். ஊத்துக்குளி செல்லும் பஸ்சில் இருந்த பயணிகள், கண்டக்டரிடம் டிக்கெட்டை மாற்றித்தர கேட்டனர். காமராஜ் ரோடு வழியாக வந்த வேறொரு பஸ்சில், அப்பயணிகள் அனுப்பப்பட்டனர். இன்னொரு பஸ்சில் இருந்த ஒரு இளம்பெண், இறங்கி வந்து, மறியல் செய்தவர்களிடம், 'மூன்று மாத கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வந்துள்ளேன். நீங்களும் பெண்கள் தானே. உங்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால் என்ன செய்வது என்று சிந்தியுங்கள்,' என கண்ணீருடன் கதறினார். சிலர் எழ முயன்றபோது, மற்றவர்கள் அவர்களை தடுத்தனர். அப்பெண்ணின் கணவர் வந்து, வேறு பஸ்சில் போகலாம் என்று கூறி அப்பெண்ணை அழைத்துச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி