கறிக்கோழி பண்ணைகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்
பல்லடம்:பல்லடம் வட்டாரத்தில் கறிக்கோழி வளர்ப்புத் தொழில் பிரதானமாக உள்ளது. இப்பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக 45 நாட்களுக்கு மேல் வளர்க்கப்படும் கறிக்கோழிகளை முறையாகப் பராமரித்தால் மட்டுமே நல்ல எடையும் ஆரோக்கியமும் கிடைக்கும். இதற்குத் தீவனம், தண்ணீர் மற்றும் காற்றோட்ட வசதி அவசியமான தேவைகளாக உள்ளன.தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால், கோழிகளுக்கு 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் வெப்ப அயற்சி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதிலிருந்து கோழிகளைப் பாதுகாக்க அவை குடிப்பதற்கு மட்டுமின்றி, பண்ணையைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் அதிகப்படியான தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் பண்ணைகளுக்குத் தேவையான தண்ணீரைப் பெறுவதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. பண்ணை விவசாயிகள் கூறுகையில், ''சாதாரண நாட்களை விடக் கோடை காலத்தில் கறிக்கோழிகள் அதிகத் தண்ணீர் குடிப்பதுடன், அவற்றைக் குளிர்விக்கவும் கூடுதல் தண்ணீர் செலவாகிறது. தற்போது ஒரு லிட்டர் 10 பைசா வீதம் லாரிகள் மூலம் தண்ணீர் விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். இதனால் வழக்கத்தைக் காட்டிலும் தற்போது தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது.தண்ணீர் பற்றாக்குறை தொடர்ந்து நீடிப்பதால், லாரிகளில் விற்கப்படும் தண்ணீரின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில தினங்களில் கோடை மழை பெய்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் ஓரளவாவது உயர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு குறையும். மழை பெய்யத் தவறினால் கறிக்கோழிகளின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகும்'' என்கின்றனர்.