உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராம ஊராட்சிகளில் 8,000 காலி பணியிடம் துாய்மை பணியாளர் பற்றாக்குறையால் அவதி

கிராம ஊராட்சிகளில் 8,000 காலி பணியிடம் துாய்மை பணியாளர் பற்றாக்குறையால் அவதி

திருப்பூர்:ஊராட்சிகளில் சுகாதாரப்பணி மேற்கொள்ளும் துாய்மைப் பணியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், ஊராட்சி நிர்வாகங்கள் திணறுகின்றன.தமிழகத்தில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. வீடு வீடாக சென்று குப்பை சேகரிப்பது, அவற்றை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தரம் பிரிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெரும்பாலான ஊராட்சிகளில், துாய்மைப்பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. ஏராளமானோர் பணி ஓய்வு பெற்று சென்றுவிட்டனர்; பலர், சம்பளம் குறைவு என்பதால், வேறு வேலைகளுக்கு சென்று விடுகின்றனர்.ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:ஊராட்சிகளில், ஏறத்தாழ, 8 ஆயிரம் துாய்மை பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன; அவை நிரப்பப்படாமல் இருப்பதால், கிராமங்களில் துாய்மைப்பணி மேற்கொள்வதில் தடுமாற்றம் தென்படுகிறது. அதிகபட்சம், 6,000 ரூபாய் வரை மட்டுமே அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என்பதால், இப்பணியை மேற்கொள்ள பலரும் முன்வருவதில்லை.துாய்மைப்பணியாளருக்கு தொழில் தாவா சட்டப்படி ஒரு சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அதே நேரம், துறை சார்பிலும் சம்பளம் நிர்ணயம் செய்யப்படுகிறது. தொழில் தாவா சட்டப்படி நிர்ணயிக்கப்படும் சம்பளத்தை விட, துறை சார்பில் நிர்ணயிக்கப்படும் சம்பளம் குறைவு. 'இதுபோன்ற குறைபாடு களையப்பட வேண்டும்' என, ஊரக வளர்ச்சி முகமை ஊழியர் சங்கங்கள் சார்பில் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.திருப்பூர் மாவட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு அவிநாசி ஒன்றிய தலைவர் ரவிக்குமார் கூறுகையில், ''கிராம ஊராட்சிகளில் துாய்மைப் பணியாளர், துாய்மை காவலர், பம்ப் ஆபரேட்டர் என அனைத்து பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால், அன்றாட பணிகளை மேற்கொள்வதில் சவாலான நிலையுள்ளது. விரைவில் காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ