உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடுமலையில் பஸ் ஸ்டாப்பில் பாய்ந்தது கார்! 3 பேர் பலி; 6 பேர் படுகாயம்; பொதுமக்கள் ரோடு மறியல்

உடுமலையில் பஸ் ஸ்டாப்பில் பாய்ந்தது கார்! 3 பேர் பலி; 6 பேர் படுகாயம்; பொதுமக்கள் ரோடு மறியல்

உடுமலை : உடுமலை அருகே, தேசிய நெடுஞ்சாலையில்அதிவேகமாக வந்த கார்,வேகத்தடையில் மோதி, பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தவர்கள் மீது மோதியது. இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஆறு பேர் படுகாயமடைந்தனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே பாலப்பம்பட்டி நடுநிலைப்பள்ளிமுன், பஸ் ஸ்டாப்பில், நேற்று மதியம், 2:00 மணியளவில், நுாற்பாலையில் பிட்டர் பணிக்கு வந்த, மதுரை, நாகமலை புதுக்கோட்டையைச்சேர்ந்த, ராஜகோபால், 50, வேஸ்ட் குடோன் உரிமையாளர் மோகன்ராஜ், 52, ஆகியோர், ஸ்கூட்டருடன், நின்று பேசிக்கொண்டிருந்தனர்.அங்கு, கோவை மதுக்கரையை சேர்ந்த, ரங்கசாமி, 68, உடுமலை வி.ஜி.,ராவ் நகரைச்சேர்ந்த சதாசிவம், 75 மற்றும் பலர் பஸ்சிற்காக அமர்ந்திருந்தனர்.அப்போது, கேரளா மாநிலம், திருச்சூர் வடக்கன்சேரி, ஆத்துாரைச்சேர்ந்த, சுஜித், 47, குடும்பத்தினர் காரில், பழநி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.அதிவேகமாக வந்த கார், ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையில் மோதியதுடன், பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தவர்கள் மீது மோதி உருண்டது.இதில், பஸ் ஸ்டாப் இருக்கை உடைந்ததோடு, அரசு பள்ளி காம்பவுண்ட் சுவர் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்தது. பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.இந்த விபத்தில், பஸ் ஸ்டாப்பில், நின்றிருந்த, ராஜகோபால், மோகன்ராஜ், ரங்கசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். சிமெண்ட் இருக்கையில் அமர்ந்திருந்த சதாசிவம் படுகாயமடைந்தார்.மேலும் காரில் பயணித்த, சுஜித், 41, அவரது மனைவி அஸ்வதி, 25, குழந்தைகள், கவுதம் சுஜித், 9, திருக்கயில்சுஜித், 4, ரிமானி, 75 ஆகியோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் இறங்கிய மக்கள்

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) சார்பில், திண்டுக்கல் - பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. திட்ட வடிவமைப்பில் உள்ள குளறுபடியால், புதிய ரோடு மற்றும் பழைய ரோடு சந்திப்பு பகுதிகள் உட்பட, பாலப்பம்பட்டி, ராஜாவூர், வேடபட்டி, மடத்துக்குளம் கே.டி.எல்., பகுதிகளில், அடிக்கடி ஏற்படும் வாகன விபத்துகளால் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகிறது. விரைவுச்சாலை அமைக்கும் போது, பழைய ரோடு பகுதியில், மேல்பாலம், கீழ்பாலம் என, விபத்து பகுதிகளில் மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், நேற்று விபத்து ஏற்பட்டதால், ஆவேசமடைந்த பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலையில், ரோடு மறியலில் ஈடுபட்டனர்.பல முறை மனு அளித்தும், அதிகாரிகள் அலட்சியத்தால், கடந்த ஒரு மாதத்தில், 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.குடியிருப்புகள், பஸ் ஸ்டாப், பள்ளி என மக்கள் நெரிசல், வாகன போக்குவரத்து உள்ள ரோடுகள் சந்திப்பு பகுதியில், மேம்பாலம் அல்லது கீழ் பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, நுாற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உடுமலை தாசில்தார் சுந்தரம், டி.எஸ்.பி., ஆறுமுகம் ஆகியோர், பொதுமக்களிடம் பேச்சு நடத்திய நிலையில், நிரந்தர தீர்வு காணவும், நகாய் அதிகாரிகள் வரை வேண்டும், என ஆக்ரோஷமாக கூறினர்.நேற்று மாலை, 4:00 மணிக்கு துவங்கிய போராட்டம், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, மாலை, 6:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.தேசிய நெடுஞ்சாலையில், 2 மணி நேரம் நடந்த போராட்டத்தால், போக்குவரத்து பாதித்தது. பல கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் காத்திருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Annamalai
செப் 14, 2024 21:17

வேகக்கட்டுப்பாடு கருவி எல்லா வாகனங்களிலும் பொருத்தலாம் .50-80 கிலோ மீட்டர் /மணிக்கு என்று வாகனங்கள் பொறுத்து வைக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை