உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பட்ஜெட் ஒளிபரப்பு: ஆர்வம் காட்டாத மக்கள்

பட்ஜெட் ஒளிபரப்பு: ஆர்வம் காட்டாத மக்கள்

திருப்பூர்; திருப்பூரில், தமிழக அரசின் பட்ஜெட் குறித்த ஒளிபரப்பைக் காண பொது மக்கள் ஆர்வம் காட்டவில்லை.தமிழக அரசின் நடப்பு 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று துவங்கிய சட்டமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்து, பேசினார்.அடுத்தாண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த அரசின் ஐந்தாண்டு கால பதவிக் காலத்தின் கடைசி பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது. இதனால் தேர்தலை மனதில் வைத்து பல்வேறு அறிவிப்புகள், சலுகைகள் வெளியாகும். புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பிலும் இருந்தது.இதனால், தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் பட்ஜெட் தாக்கல் நடவடிக்கையை நேரடியாக ஒளி பரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்து மாவட்டங்கள் மற்றும் சட்டசபை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.பல்வேறு பகுதிகளில் எல்.இ.டி., திரைகள் அமைத்து, நிழல்பந்தல் அமைத்து, சேர்கள் போட்டும் பொதுமக்கள் அமர்ந்து பட்ஜெட் தாக்கலை பார்க்கும் வகையில், ஏற்பாடு செய்திருந்தனர். இவற்றில் எங்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்கவில்லை. கட்சியினர் கூட சென்று அங்கு அமர்ந்து இதைக் காண ஆர்வம் காட்டாத நிலைதான் நீடித்தது.

காரணம் என்ன?

பொதுமக்கள் சிலர் கூறியதாவது:கட்சி கூட்டம் என்றால், நிர்வாகிகள் இருப்பர்; கவனிப்பு இருக்கும். பரிசு பொருள், ரொக்கம் உள்ளிட்ட கூடுதல் கவனிப்புகள் இருக்கும்.ஆனால், குடிக்க தண்ணீர் கூட தராத நிலையில் கொளுத்தும் வெயிலில் யார் வந்து இதை பார்ப்பர். 'டிவி' யில் நேரடி ஒளிபரப்பு நடக்கும் நிலையில் பட்ஜெட்டில் ஆர்வம் செலுத்துவோர் தங்கள் வீடுகளிலேயே பார்த்துக் கொள்வர்.இதற்கு எதற்கு தேவையற்ற செலவும், ஏற்பாடும் என்று கட்சியினர் கூட நொந்து கொண்டனர். கூட்டம், போராட்டத்துக்கும் பணம் செலவிட்டு கூட்டம் சேர்ப்பதை வழக்கமாக மாற்றிவிட்டனர். இது கட்டாய நடைமுறையாக மாறி விட்டது. இனி மேல் இப்படித்தான் கூட்டம் சேர்க்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ