துாய்மை சேவை முகாம் வரும் 17ம் தேதி துவக்கம்
திருப்பூர்: நாடுமுழுவதும் செப்., 17 முதல் அக்., 2 ம் தேதி வரை துாய்மை சேவை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. மத்திய அரசின் சுகாதார துறை சார்பில், துாய்மைப் பணிகள் குறித்த விழிப்புணர்வு; துாய்மையின் முக்கியத்துவம் ஆகியன குறித்து முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.அவ்வகையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இதைச் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வட்டார வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.திருப்பூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் பெருமாநல்லுார் ஊராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஊக்குவிப்பாளர்கள், ஊராட்சி செயலர்கள், அங்கன்வாடி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். துாய்மை சேவை இயக்கப் பணிகள் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது.