உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை முயற்சி

குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை முயற்சி

திருப்பூர்;குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள கோவா சென்ற தம்பதியை, திருப்பூர் போலீசார் துரிதமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டனர்.திருப்பூரை சேர்ந்த 35 வயது நுால் வியாபாரி ஒருவர், தொழில் தொடர்பாக கடன் பெற்றிருந்தார். கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் மனமுடைந்தார். மனைவி, 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டார். வாட்ஸ்ஆப் மூலம்,''கடன் பிரச்னையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறோம்; எங்களை தேட வேண்டாம்,'' என்று தகவலை, பெற்றோர் மற்றும் உறவினருக்கு பகிர்ந்து விட்டு மொபைல்போனை சுவிட்ச்ஆப் செய்தார்.திருப்பூர் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிந்தது. போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில், இரண்டு துணை கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர் அடங்கிய குழுவினர் தீவிரமாக விசாரித்தனர். தம்பதி சென்ற கார், பெங்களூரு விமான நிலையத்தில் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். காருக்குள், மொபைல் போனை விட்டுச்சென்றது தெரிந்தது. விரைந்து சென்ற திருப்பூர் போலீசார், பெங்களூரு போலீசார் உதவியுடன் விசாரித்தனர். விமானம் மூலம், கோவா சென்றது தெரியவந்தது. அவர்கள் பேசிய 'போன்கால்' மற்றும் வங்கி பணப்பரிவர்த்தனை போன்றவற்றை போலீசார் கண்காணித்தனர். அதில், கோவாவில் ஏ.டி.எம்., ஒன்றில் பணம் எடுத்திருந்தது தெரிந்தது. பெங்களூரு மற்றும் கோவா போலீசாரின் உதவியோடு அங்கு விரைந்து சென்ற போலீசார், கடற்கரையோர ஓட்டலில் அறை எடுத்திருந்த தம்பதியை மீட்டனர்.போலீசார் கூறுகையில், 'அடுத்தடுத்த தொடர் நடவடிக்கை காரணமாக, 24 மணி நேரத்துக்குள் குழந்தைகளுடன் தம்பதி பத்திரமாக மீட்கப்பட்டு திருப்பூர் அழைத்து வரப்பட்டனர். குடும்பத்துக்கு தேவையான கவுன்சிலிங் கொடுக்க அறிவுறுத்தியதன்படி, அவர்களுக்கு கவுன் சலிங் கொடுக்கப்பட்டது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

v.Rajamohan
ஆக 25, 2024 13:17

அருமை!! இப்பவும் அரிதாக நல்லா உள்ளமும் கடமையுணர்வும் கொண்ட போலீசார்கள் உள்ளனர்?பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை