அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை அவசியம்
பல்லடம்; பல்லடம் வட்டாரத்தில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விபத்து, நோய் பாதிப்பு, அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்காக, பல்லடம் அரசு மருத்துவமனையை நாடுகின்றனர்.இங்கு, அவசர சிகிச்சை, கண், காது, மூக்கு, தொண்டை, பல், காசநோய் சிகிச்சைகள், குழந்தைகள், பெண்கள் பிரிவு, தீவிர சிகிச்சை, சித்தா உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் உள்ளன.தினசரி, 700க்கும் அதிகமானோர் புற நோயாளிகளாக வந்து செல்கின்றனர். பல்வேறு மருத்துவ சிகிச்சை பிரிவுகளுடன், வட்டாரத்தின் தலைமை மருத்துவமனையாக உள்ள இம்மருத்துவமனை, நீண்ட காலமாக, அடிப்படை வசதி குறைபாடுகளால் அல்லலுறுகிறது. குடிநீருக்கு பதில் 'காற்று'
மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களில், பெரும்பாலும் காற்று மட்டுமே வருகிறது. நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் காத்திருக்க தேவையான இடமின்றி, படிக்கட்டுகளிலும், தரையிலும் அமர வேண்டிய அவலம் உள்ளது. பார்வையாளர் இடத்தில் இருந்த ஒரே ஒரு பெஞ்சும் சமீப நாட்களாக காணவில்லை. கழிப்பிடத்துக்கு பூட்டு
நீண்ட நாட்களுக்குப் பின், கழிப்பிடம் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது. இதற்கிடையே, தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட கழிப்பிடங்கள் நிரம்பி வழிந்ததால், அவற்றுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. நான்கே மருத்துவர்கள்
அவலங்கள் ஒருபுறம் இருக்க, 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருக்க வேண்டியமருத்துவமனையில், 4 பேர் மட்டுமே உள்ளனர்.இங்குள்ள சில மருத்துவர்கள் கூடுதல் பணியுடன் பல்வேறு மருத்துவமனையில் பணியாற்றி வருவதாக, பல்லடம் தலைமை மருத்துவர் ராமசாமி தெரிவித்திருந்தார். இருப்பினும், நீண்ட நாட்களாகியும் இதே நிலை நீடிக்கிறது. இதனால், இங்குள்ள மருத்துவர்களுக்கு பணிச்சுமை ஏற்படுவதுடன், நோயாளிகளுக்கு தேவையான காலகட்டங்களில் உரிய சிகிச்சை கிடைப்பதில்லை. சுகாதாரம் கேள்விக்குறி
மேலும், செவிலியர்கள், உதவியாளர்கள், துப்புரவாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவே உள்ளன.மருத்துவமனையின் சுகாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு 'அவசர சிகிச்சை' வழங்க வேண்டியது அவசியம்.