பனியன் நிறுவனங்களில் கைவரிசை; மோசடி ஆசாமி கைது
திருப்பூர்; திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில், 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான பனியன்களை வாங்கி கொண்டு பணத்தை கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்ட வர்த்தக முகவர், மீண்டும் கைவரிசை காட்ட முயன்ற போது போலீசில் சிக்கினார்.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 54, பனியன் வர்த்தக முகவர். திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் பனியன்களை கொள்முதல் செய்து, கர்நாடக மாநிலம், மங்களூர், பெங்களூரு போன்ற பகுதிகளில் நிறுவனங்களுக்கு வாங்கி கொடுத்து வந்தார். கொள்முதல் செய்யப்படும் பனியன்களுக்கான தொகையை கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக, அவருடன் வர்த்தகம் செய்த நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு செல்லும் போது மோசடி குறித்து தெரிய வந்தது.வர்த்தக முகவர், திருப்பூரில் இதுபோன்ற பல சிறிய பனியன் நிறுவனங்களில் அறிமுகமாகி கொள்முதல் செய்யப்படும் பனியன்களுக்கு பணம் கொடுக்காமல், பனியன்களை வேறு இடங்களில் விற்று மோசடி செய்வது தெரிய வந்தது. 13 நிறுவனங்களில் இருந்து, 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான பனியன்களை பெற்று ஏமாற்றியது தெரிந்தது. இதுதொடர்பாக, திருப்பூர் சைமா சங்கம் வாயிலாக நுாதன மோசடி குறித்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். கமிஷனர் உத்தரவின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்து வந்தனர்.கண்காணித்து மடக்கிய போலீஸ்
மோசடி ஆசாமி திருப்பூருக்கு நேற்று வருவது குறித்து அறிந்த போலீசார் அவரை கண்காணித்தனர். காங்கயம் ரோடு, மும்மூர்த்தி நகரில் உள்ள நிறுவனங்களில் பனியன் வாங்குவது தொடர்பாக அணுகி விட்டு, குமார் நகரில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு சென்ற போது போலீசார் அவரை பிடித்தனர். அவரை கைது செய்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
10 ஆண்டாக கைவரிசை
பனியன் நிறுவனங்களில் கைவரிசை காட்டிய நபர் கடந்த, பத்து ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள சிறிய நிறுவனங்களில், 30 ஆயிரம் முதல், 6 லட்சம் ரூபாய் வரை பனியன்களை கொள்முதல் செய்து, அதை வேறு இடங்களுக்கு விற்று மோசடி செய்து வந்தார். சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றியது தெரிந்தது. இந்த நபர் பயன்படுத்திய ஜி.எஸ்.டி., எண் போன்ற அனைத்தும் வேறு நிறுவனங்களின் பெயரில் உள்ளது. அவர்களுக்கு தெரிந்து மோசடி செய்தாரா அல்லது இதுபோல், யார் யாரிடம் எல்லாம் ஏமாற்றியுள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.- போலீசார்.