பார் ஆக மாறும் அரசுப்பள்ளி வளாகங்கள்... இதிலுமாங்க அலட்சியம்! கிடப்பில் இரவு காவலர் நியமிக்கும் திட்டம்
உடுமலை : அரசுப்பள்ளிகளுக்கு இரவுக்காவலர் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு வழக்கம் போல், அரசால், கிடப்பில் போடப்பட்டு, பள்ளிகள்தோறும், காலை வேளைகளில், காலி மதுபாட்டில்களை அகற்றுவதை முதற்பணியாக மேற்கொள்ள வேண்டிய அவலம் நிலவுகிறது.உடுமலை பகுதியில், 98 அரசு துவக்க மற்றும் 22 நடுநிலைப்பள்ளிகளில், பல ஆயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.இதில், நகரம் மற்றும் கிராமப்புறங்களில், செயல்படும் அனைத்து பள்ளிகளிலும், காலையில் முதல் பணியாக இருப்பது, காலி மதுபாட்டில்களை அகற்றுவதேயாகும்.பிஞ்சு குழந்தைகள் படிக்கும் குழந்தைகள் மனரீதியாக பாதிக்கும் அளவுக்கு, சுற்றுச்சுவர், பள்ளி வகுப்பறைகள் என அனைத்து இடங்களிலும், காலி மதுபாட்டில்களும் நிறைந்து கிடக்கிறது.பிற சமூக விரோத செயல்களும் அரங்கேறுவதால், பள்ளிகளின் இயல்பான சூழ்நிலை மாறி, மாணவ, மாணவியர் பாதித்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு, பள்ளிகளில், இரவுக்காவலர் நியமிக்கப்படாதது முக்கிய காரணமாக உள்ளது.அனைத்து பள்ளிகளிலும், இரவுக்காவலர் நியமிக்க வேண்டும் என, அனைத்துப்பகுதி பெற்றோர் மற்றும் கல்வி ஆர்வலர்கள் தரப்பில், கோரிக்கை எழுந்தது. அறிவிப்பு வந்தது
இதையடுத்து, அரசுப்பள்ளிகளில், இரவுக்காவலர் நியமிக்கப்படுவார்கள் என அரசு அறிவித்தது. ஊரக வளர்ச்சித்துறை சார்பில், முதற்கட்டமாக, மாநிலம் முழுவதும், 450க்கும் அதிகமான மாணவர் எண்ணிக்கை உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டது.இதில், ஊரக பகுதி பள்ளிகளுக்கு, முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக இரவு காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பும் வெளியாகி ஓராண்டுக்கு மேலாகி விட்டது.தற்போது உடுமலை நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில், சமூகவிரோத செயல்கள் அதிகரித்து வருகிறது.சில பள்ளிகளில், சுற்றுச்சுவர் இல்லாதது நிலையை மேலும் மோசமாக்குகிறது. உதாரணமாக, உடுமலை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அருகிலும், எதிரிலும், நுாற்றுக்கணக்கான காலி மதுபாட்டில்கள் கிடப்பது தொடர்கதையாக உள்ளது.இனியாவது தமிழக அரசு, அரசுப்பள்ளி மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு, இரவுக்காவலர்களை நியமிக்க வேண்டும். பள்ளிக்கு அருகில் செயல்படும் 'டாஸ்மாக்' மதுக்கடைகளையும் அகற்ற உத்தரவிட வேண்டும்.இல்லாவிட்டால், மாணவ, மாணவியரின் பாதிப்பை நாள்தோறும் பார்க்கும் பொதுமக்களும், பெற்றோரும், கல்வி ஆர்வலர்களும் அரசுக்கு எதிராக போராடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.மேலும், பள்ளி வளாகங்களை துாய்மைப்படுத்த நியமிக்கப்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு நிலுவையில்லாமல், சம்பளம் வழங்குவதும் அவசியமாகும்.