ஆடைகளை கழற்றி போராடுவேன் தி.மு.க., பிரமுகர் வினோத மிரட்டல்
பல்லடம்:திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இந்த வகையில், 8வது வார்டு, படேல் வீதியில், குழி தோண்டும் பணி நடந்தது. தகவலறிந்து வந்த பகுதி மக்கள், எதிர்ப்பு தெரிவித்து பணிகளை நிறுத்தி, -மங்கலம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.மக்களுக்கு ஆதரவாக, 8வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சுகன்யா மற்றும் அவரது கணவர் ஜெகதீசன் போராட்டத்தில் பங்கேற்றனர். நீண்ட நேரம் ஆகியும் அதிகாரிகள் யாரும் வராததால், 'இனியும் தாமதித்தால் ஆடைகளை கழற்றி போராடுவேன்' என, ஜெகதீசன் சத்தமாக பேசினார். சபரிமலை செல்ல மாலை அணிந்திருந்த நிலையில், ஜெகதீசன் இவ்வாறு ஆபாசமாக பேசியது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.மேலும், நகராட்சி நிர்வாகம் ஆளுங்கட்சி வசம் உள்ள நிலையில், அக்கட்சி கவுன்சிலரே போராட்டத்தில் ஈடுபட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.