நவீனம் இருந்தால் தொழில் வசப்படும்
திருப்பூர்:இந்தியா சர்வதேச பின்னலாடை கண்காட்சி துவக்க நாளில் நடக்கும் கருத்தரங்கில், தொழில்துறையினர் பங்கேற்று பயன்பெறலாம் என, ஐ.கே.எப்., அழைப்பு விடுத்துள்ளது.இந்தியா நிட்பேர் அசோசியேஷன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில், ஆண்டுக்கு இருமுறை, இந்தியா சர்வதேச பின்னலாடை கண்காட்சி நடத்தப்படுகிறது.அவ்வகையில், 51வது பின்னலாடை கண்காட்சி, நாளை (4ம் தேதி) திருமுருகன்பூண்டி அருகேயுள்ள ஐ.கே.எப்., வளாகத்தில் துவங்குகிறது. மூன்று நாட்கள், காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை கண்காட்சி நடக்க உள்ளது.தமிழக அரசின் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில், கண்காட்சியை திறந்து வைக்கிறார்.கண்காட்சி திறப்பு விழாவை தொடர்ந்து, நான்கு தலைப்புகளில், தனியே கருத்தரங்குகள் நடக்க உள்ளன. மதியம், 12:30 முதல், 1:30 மணி வரை, விளையாட்டு ஆடை உற்பத்தி, பிராண்ட் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான வழிகாட்டி கருத்தரங்கு, மதியம், 2:30 முதல், மாலை, 3:30 மணி வரை, இந்தியாவில் செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி மற்றும் 'ஆக்டிவ் வேர்' ஆடைகள் உற்பத்தி கட்டமைப்பு கருத்தரங்கு நடக்கிறது.மாலை, 3:30 முதல், 4:30 மணி வரை, திருப்பூரின் செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி மற்றும் 'ஆக்டிவ் வேர்' உற்பத்தி தொடர்பான கருத்தரங்கு நடக்கிறது. நிறைவாக, பனியன் தொழிலில் இளம் தலைமுறையினர் என்ற கருத்தரங்கு, மாலை, 4:30 முதல், 5:30 மணி வரை நடக்கிறது. கட்டாயம் வாங்க...
கண்காட்சி குறித்து, ஐ.கே.எப்., தலைவர் சக்திவேல் கூறியதாவது:சர்வதேச வர்த்தகர்களை திருப்பூருக்கு அழைத்து, நமது உற்பத்தி சாதனைகளை தெரியப்படுத்தும் வகையில், ஐ.கே.எப்., கண்காட்சி நடத்தப்படுகிறது. கருத்தரங்கில், முன்னணி தொழில் வல்லுனர்கள், புதிய தொழில்நுட்பங்களை விவரிக்கின்றனர். அனைத்து தொழில்துறையினரும், கருத்தரங்குகளில் பங்கேற்று பயன்பெறலாம். குறிப்பாக, இளம்தலைமுறை தொழில்முனைவோர் கட்டாயம் பங்கேற்று, தொழில் வல்லுனர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.