விடுப்பு கிடைத்தால் போதும்... முழு நாளும் மகனுடன்தான்
தாராபுரத்தை சேர்ந்தவர்கள் மோகன்ராஜ் - வித்யா தம்பதியர். திருப் பூர், மண்ணரையில் வசிக்கின்றனர். மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது.மோகன்ராஜ், ஜே.சி.பி., உரிமையாளர் மற்றும் விவசாயப்பணியில் கவனம் செலுத்துகிறார். வித்யா, சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராகபணிபுரிகிறார்.மோகன்ராஜ்:நான் பணிகளுக்கு செல்லும் போது அம்மா/ மாமியார், மாமானாரிடம் குழந்தை இருப்பான். மாலையில் பணி முடிந்து வந்தவுடன் இரவு வரை அவனுடன் தான் என் பொழுது அமையும். பெற்றோர் கூட இல்லை என்ற ஏக்கம் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதால், தினமும் எவ்வளவு பணி இருந்தாலும் இரவு எந்நேரமானாலும், வீட்டுக்கு வந்து விடுவேன்; குழந்தையை ஏங்கவிடக்கூடாது. நாம் வைக்கும் பாசமும், அன்பும் தான் குழந்தைக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.வித்யா:படிப்பு, பணிச்சூழல் காரணமாக சென்னையில் தங்கி பணியாற்ற வேண்டிய நிர்பந்தம். இருந்தாலும், தினமும் காலை, மாலையில் குழந்தையுடன் கட்டாயம் வீடியோகாலில் பேசி விடுவேன். உடனிருக்க வேண்டும் என உள்ளத்தில் எண்ணி விட்டால், விடுப்பு எடுத்து இரவோடு இரவாக பயணத்தை துவங்கி விடுவேன். பணிச்சூழலால் பார்க்க முடியாவிட்டால், மனம் சற்று வெதும்பும். என் கணவர், மாமியார், என் குடும்பத்தினர் குழந்தை மீது கொண்டுள்ள அன்பு, பாசத்தால் பணிகளில் கவனம் செலுத்த முடிகிறது. விடுப்பு கிடைத்து விட்டால், ஒருநாள் முழுக்க, மகனுக்காக இருவருமே ஒதுக்கி விடுவோம்.