திருப்பூர்;மழை பெய்த வரும் நிலையிலும், திருப்பூர் கால்நடை சந்தைக்கான மாடு வரத்து அதிகரித்தே வருகிறது. வரத்து குறையாததால், விலை உயர்வும் இல்லை.வழக்கமாக மழை துவங்கியதும், பசும்புல் வளர்ச்சி ஓரளவு அதிகரிக்கும். தீவனம் உற்பத்தியாவதால், கன்றுகுட்டிகளை விற்காமல் விவசாயிகள் வளர்ப்பர். ஆனால், கடந்த பத்து நாட்களாக திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்த போதும், நேற்று, திருப்பூர், அமராவதிபாளையம் கால்நடை சந்தைக்கு கன்றுகுட்டி வரத்து அதிகரித்திருந்தது.இருநுாறுக்கும் அதிகமான கன்றுகுட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கன்றுகுட்டி, 3,500 முதல், 5,000 ரூபாய் வரை விற்றன. காளை, 24 ஆயிரம் முதல், 27 ஆயிரத்து, 500 வரையும், எருது, 30 ஆயிரம் முதல், 33 ஆயிரம், மாடுகள், 26 முதல், 32 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. இம்மாத துவக்கத்தில் கூடிய சந்தைக்கு, 870 மாடுகள் வந்தன. கடந்த வாரம், 920 ஆக இருந்த மாடுகள் வரத்து, நடப்பு வாரம், 952 ஆக உயர்ந்துள்ளது.சந்தை ஏற்பட்டாளர்கள் கூறுகையில், 'தற்போதைக்கு மழை பொழிந்தாலும், வெயிலின் தாக்கம் இன்னமும் ஒரு மாதம் வரை இருக்குமென விவசாயிகள் எண்ணுகின்றனர். ஆகையால், கன்றுகுட்டிகளை தோட்டங்களில் கட்டி வைத்து வளர்க்காமல், விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தற்போதைக்கு விசேஷ தினங்கள் இல்லாததால், மாடுகளுக்கு நல்ல விலையும் கிடைப்பதில்லை,' என்றனர்.