சர்வதேச பின்னலாடை கண்காட்சி: திருப்பூரில் செப்., 4ல் துவக்கம்
திருப்பூர்:இந்திய பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புகளை பெற்றுத்தரும் சர்வதேச பின்னலாடை கண்காட்சி, திருப்பூரில் வரும் 4ம் தேதி துவங்குகிறது.திருப்பூரில், இந்தியா நிட்பேர் அசோசியேஷன் தலைவர் சக்திவேல் நேற்று கூறியதாவது:இந்தியா நிட்பேர் அசோசியேஷன், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,), திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இணைந்து, 50 ஐ.கே.எப்., பின்னலாடை கண்காட்சிகளை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.51வது கண்காட்சி, ஐ.கே.எப்., வளாகத்தில், வரும் செப்., 4ல் துவங்கி 6ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. தமிழக கைத்தறி, ஜவுளி துறை முதன்மைச் செயலர் தர்மேந்திரபிரதாப் யாதவ், துவக்கிவைக்கிறார்.கலெக்டர் கிறிஸ்துராஜ் மற்றும் அனைத்து பின்னலாடை தொழில் அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், பெங்களூரு, கோல்கத்தா உள்பட நாடுமுழுவதும் உள்ள ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், புதுமையான பின்னலாடை ரகங்கள், மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகளை காட்சிப்படுத்துகின்றன.ஐரோப்பா, அமெரிக்கா, ஸ்பெயின், ஐக்கிய அரபுநாடுகள், ஆப்பிரிக்கா என, உலகளாவிய நாடுகளைச்சேர்ந்த ஆயத்த ஆடை இறக்குதி வர்த்தகர்கள் 10 ஆயிரம் பேர்; நம் நாட்டில் இயங்கும் 1,500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வர்த்தக முகமை நிறுவனத்தினருக்கு கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கண்காட்சியில் பங்கேற்று ஆடை உற்பத்திக்கான வர்த்தக விசாரணைகள் நடத்த, வெளிநாட்டு வர்த்தகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.கண்காட்சி வாயிலாக, திருப்பூர் உள்பட நாடுமுழுவதும் உள்ள பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு, புதிய ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் கைகூடும்.மூன்று நாட்களும், காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை கண்காட்சி நடைபெறும். துவக்க நாளான வரும் 4ம் தேதி, மதியம், 12:30 முதல் மாலை, 5:30 மணி வரை, கருத்தரங்கமும் நடத்தப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.