உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்றுத்திறனாளி க்கு மதிப்பு இதுதானா?

மாற்றுத்திறனாளி க்கு மதிப்பு இதுதானா?

திருப்பூர்: மனவளர்ச்சி குன்றிய, முதுகு தண்டுவடம் பாதித்த, 80 சதவீதத்துக்கு மேல் உடல் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு, மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய்; பராமரிப்பு உதவியாளர்களுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் பராமரிப்பு உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.பராமரிப்பு உதவித்தொகைக்காக விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம், பெரிச்சிபாளையம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் நேற்று நடந்தது. மாற்றுத்திறனாளிகள் 65 பேர் தங்கள் பராமரிப்பாளர்களுடன் முகாமில் பங்கேற்றனர்.காலை, 11:00 மணிக்கு முகாம் என அறிவிக்கப்பட்டிருந்ததையடுத்து, 10:00க்கே மாற்றுத்திறனாளிகள், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு வந்துவிட்டனர். முகாமோ, மதியம், 12:00 மணிக்குப் பின்னரே துவங்கப்பட்டது. பரிசோதனை முடிந்து மாற்றுத்திறனாளிகள் வீடு திரும்புவதிலும் காலதாமதம் ஏற்பட்டது. தரைத்தளத்தில், சிறிய அறையிலேயே மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அமர போதிய இடவசதியின்றி, நெருக்கடியில் மாற்றுத்திறனாளிகளும், உடன்வந்த பராமரிப்பாளர்களும் பரிதவித்தனர். இரண்டு வீல் சேர் மட்டுமே இருந்ததால், மருந்துவமனை வளாகத்திலிருந்து மருத்துவ முகாம் நடைபெற்ற அறைக்கு வர மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டனர். இட நெருக்கடி, பரிசோதனை காலதாமதத்தால் பசி காரணமாக, மாற்றுத்திறனாளிகளும், உடன்வந்த பராமரிப்பாளர்களும் வேதனை அடைந்தனர். தங்களுக்கு இப்படித்தான் மதிப்பளிப்பார்களா என்ற ஆதங்கம், அவர்களது முகங்களில் தெரிந்தன.---மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்த அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிறிய அறையே ஒதுக்கப்பட்டிருந்தது.

இனியாவது திட்டமிடுவரா?

வரும் நாட்களில் இத்தகைய மருத்துவ பரிசோதனை முகாம்களை, விசாலமான இடவசதியுள்ள திருப்பூர் கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில் நடத்தவேண்டும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், முகாம் குறித்து மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு முன்னரே முறையான தகவல் அளிக்கவேண்டும்; சம்பந்தப்பட்ட மருத்துவர்களை குறித்த நேரத்தில் முகாமில் பங்கேற்கச் செய்து, மாற்றுத்திறனாளிகள் சந்தித்துவரும் சிரமங்களை போக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை