வளம் நிறைந்த பூமிக்கு, களங்கம் விளைவிப்பதாக மாறியிருக்கிறது பாலிதீன் என்கிற நெகிழி. நெகிழியால் தயாரிக்கப்படும் பை, டம்ளர், தட்டு போன்றவை மண்ணில் மட்காமல், மண் வளத்தை மலடாக்குகிறது என்பது ஊரறிந்த, உலகறிந்த உண்மை.ஆனால், அதன் பயன்பாடை தவிர்ப்பதில் தான், ஊமை நிலை தொடர்கிறது. 'உற்பத்தியை நிறுத்த சொல்லுங்கள்; பயன்பாட்டை நிறுத்துகிறோம்' என்ற வாத, விவாதம் ஒருபுறமிருக்க, 'உற்பத்தியையும் தடுக்க முடியாது; பயன்பாட்டையும் கட்டுப்படுத்த முடியாது,' என்பதுதான், யதார்த்த நிலை.பாலிதீன் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி தான் ஆண்டுதோறும், ஜூலை, 3ல், தேசிய பாலிதீன் ஒழிப்பு தினம் கடை பிடிக்கப்படுகிறது. இந்தாண்டின் கருப்பொருளாக, 'நிலையான மாற்று வழிகளை பின்பற்ற தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்குவிப்பது,' என்பது தான்.---மேலாண்மை அவசியம்உணவு பொருள் தயாரிப்பு உட்பட சில வகை பொருட்களை 'பேக்கிங்' செய்ய 'பாலிதீன்' அவசியமாகிறது; அதனை தவிர்க்க முடியது. மாறாக, அவற்றை மறு சுழற்சிக்கு வழங்கும் பட்சத்தில், பயன்பாடை கட்டுப்படுத்த முடியும். சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, ஒரு நாளில், 100 கிலோ குப்பை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், 'பல்க் வேஸ்ட் ஜெனரேட்டர்' (மொத்த கழிவு உருவாக்கிகள்) எனப்படுகின்றனர். அவர்கள், தங்களது குப்பையை தாங்களே மேலாண்மை செய்து கொள்ள வேண்டும்; அதற்குரிய தொழில்நுட்ப உதவியை உள்ளாட்சி நிர்வாகங்கள் வழங்க வேண்டும். இத்திட்டம் மாநிலம் முழுக்க விரிவுப்படுத்தப்பட வேண்டும்.- டாக்டர் வீரபத்மன்திருப்பூர் பாதுகாப்பு இயக்க நிறுவனர்.---ரூ.58 கோடியில் திட்டம்திருப்பூர் மாநகராட்சியில், தினமும், 750 மெட்ரிக் டன் குப்பை அகற்றப்படுகிறது. 16 இடங்களில் செயல்படும் நுண்ணுயிர் உற்பத்தி மையம் வாயிலாக, 120 டன் குப்பை கையாளப்பட்டு, மக்காத குப்பை மறு சுழற்சிக்கும், மக்கும் குப்பை உரமாகவும் மாற்றப்படுகிறது. 58 கோடி ரூபாயில் நெகிழியில் இருந்து 'பயோ காஸ் யூனிட்' அமைக்க, நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு, பூர்வாங்க பணி துவங்கியுள்ளது; இதன் வாயிலாக, 250 டன் குப்பை கையாளப்படும்; 8,000 கிலோ காஸ் உற்பத்தி செய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு வழங்கப்படும். கடைகளில் பாலிதின் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு தொடர்ந்து வழங்கப்பட்டு, அவ்வப்போது பறிமுதல், அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பாலிதின் ஒழிய, மக்களின் ஒத்துழைப்பே முக்கியம்.- தினேஷ்குமார்திருப்பூர் மாநகராட்சி மேயர்---சட்டம் வேண்டும்!நெகிழி தவிர்ப்பு குறித்து, கிராமம் தோறும் சென்று, மாணவ, மாணவியர் வாயிலாக விழிப்புணர்வு வழங்கிக் வருகிறோம். காய்கறிக்கடை, பழக்கடை, மளிகைக்கடை, ஜவுளிக்கடை, இறைச்சிக்கடை என அனைத்து இடங்களிலும் நெகிழி பை பயன்பாடு இருக்கத்தான் செய்கிறது.'பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் துணி பைகளை எடுத்து வாருங்கள் என கட்டாயப்படுத்தினால், வேறு கடைக்கு சென்று விடுகின்றனர்' என, கடைக்காரர்கள் கூறுகின்றனர்.எனவே, விழிப்புணர்வு என்பது, ஒரு சதவீதம் மட்டுமே பலன் தருகிறது. நெகிழி பயன்பாடை தவிர்க்க சட்டம் இயற்ற வேண்டும்.- டாக்டர். மோகன்குமார்என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர்சிக்கண்ணா அரசு கல்லுரி, திருப்பூர்.---தொடரும் கண்காணிப்பு!நெகிழி பையில் சூடான டீ, குழம்பு உள்ளிட்டவற்றை ஊற்றிக் கொடுக்க கூடாது; இது, உடலுக்கு மிகவும் கேடு தரும்; உயிர் கொல்லி நோய் வருவதற்கு கூட காரணமாகிவிடும். மளிகைக்கடையில், முடிச்சுப்பை வடிவில் நெகிழி பயன்படுத்தப்படுகிறது; இது தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். தடை செய்யப்பட்ட 'ஒன் யூஸ்' நெகிழி பயன்பாடு தொடர்பான 'ரெய்டு' தொடர்ந்து நடத்தி வருகிறோம். கடந்த, 2023 ஏப், முதல், இந்தாண்டு ஜூன் வரை, 272 கடை, நிறுவனங்களுக்கு, 5.47 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.- டாக்டர். விஜயலலிதாம்பிகைநியமன அலுவலர், உணவு பாதுகாப்புதுறை------300 ஆண்டுகள் எதிர்வினையாற்றும்!நெகிழி பயன்பாடு கட்டுப்படுத்த, அரசு, மஞ்சப்பை திட்டத்தை கொண்டு வந்தது; பெரிதாக பலன் தரவில்லை. பாலிதின் என்பது, அன்றாட வாழ்வில் இரண்டற கலந்துவிட்டது. பெட்ரோலிய பொருட்களில் இருந்து, 168 வகை நெகிழி சார்ந்த பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன; இதில், மருத்துவ துறையில் மட்டும், 56 பொருட்கள்; எஞ்சியவை, எலக்ட்ரானிக் உள்ளிட்ட பிற பொருட்களாக பயன்பாட்டில் உள்ளன.'ஒவ்வொரு மனிதனும் தினமும், 30 கிராம் பாலிதின் பொருட்களை துாக்கி எறிகிறான்; கடலில் கலக்கும் பாலிதின் கழிவு மட்டும், 80 லட்சம் டன் பில்லியன். பெட்ரோலிய உற்பத்தி முற்றிலும் இல்லாமல் போனால் தான், நெகிழி ஒழியும்; அந்த நிலை வந்தாலும் கூட, இதுநாள் வரை நாம் மண்ணில் உள்ள நெகிழி பொருட்கள், 300 ஆண்டுகளுக்கு எதிர்வினையாற்றும்' என்கிறது ஒரு ஆய்வு.- கோவை சதாசிவம்சுற்றுச்சூழல் எழுத்தாளர்