சரணாலய பகுதி மக்களின் வேண்டுகோள் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி
திருப்பூர் : நஞ்சராயன் பறவைகள் சரணாலய பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.திருப்பூர், குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள நஞ்சராயன் குளம், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு, வனத்துறை பராமரிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, அந்த இடத்துக்கு உலகளாவிய அந்தஸ்து பெறும் வகையில், 'ராம்சர்' அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா, ஊத்துக்குளி தாசில்தார் ராகவி, ஊத்துக்குளி பி.டி.ஓ., சரவணன் ஆகியோர் அப்பகுதியை பார்வையிட்டனர். அப்போது குடியிருப்புவாசிகள் சில கோரிக்கைகளை அதிகாரிகளிடம் முன் வைத்தனர்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:நஞ்சராயன் குளத்தையொட்டியுள்ள மக்களின் குறைகள் கேட்கப்பட்டு, அதற்குரிய தீர்வு ஆலோசிக்கப்பட உள்ளது. நஞ்சராயன் நகர் மக்கள் வழித்தடம் கேட்கின்றனர். குளத்துப்பாளையம் பகுதி மக்கள் மயான இடம் கேட்கின்றனர். இதுபோன்று அங்குள்ள மக்கள், 13 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.அடுத்த மூன்று மாதங்களுக்குள் இக்கோரிக்கைளுக்கு தீர்வு காணப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சராணலயம் சார்ந்த இத்தகைய ஆட்சேபனை, கோரிக்கைளுக்கு தீர்வு காணப்பட்ட பின், சரணாலய பராமரிப்பு மற்றும் மேம்பாடு பணிகள் துவங்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.---திருப்பூர், நஞ்சராயன் குளம்.
சூழல் காப்பதில் முக்கியத்துவம்!
வனத்துறையினர் கூறியதாவது:நஞ்சராயன் குளத்தை பொறுத்தவரை, பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டாலும், நுாறு சதவீதம் பொழுது போக்குதளமாக அதனை மாற்ற முடியாது. காரணம், அங்கு வந்து செல்லும் பறவைகளுக்கு மனிதர்களால் இடையூறு ஏற்படக்கூடாது என்பது தான். எனவே, சூழல் சுற்றுலா சார்ந்த திட்டங்கள் வகுக்கப்படும்; பறவைகள், நீர்நிலைகள், அவற்றின் முக்கியத்துவம் குறித்து மக்கள் அறிந்து கொளும் வகையில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.