உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கழிவுகளை குவிப்போர் மீது நடவடிக்கை ஊராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை

கழிவுகளை குவிப்போர் மீது நடவடிக்கை ஊராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை

உடுமலை ;உடுமலை நகரப்பகுதிகளிலிருந்து, இரவு நேரங்களில் கிராமங்களில் குப்பைக்கழிவுகளை கொட்டுவதை ஊராட்சி நிர்வாகத்தினர் கண்காணித்து வருகின்றனர்.உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. உடுமலை நகரையொட்டி, பெரியகோட்டை, கணக்கம்பாளையம், சின்னவீரம்பட்டி, போடிபட்டி உள்ளிட்ட ஊராட்சிகள் உள்ளன.இப்பகுதிகளில் குடியிருப்புகளின் எண்ணிக்கையும் மற்ற ஊராட்சிகளை விடவும் அதிகமாக உள்ளது. இதனால் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில், இந்த ஊராட்சிகளில் சவாலாகவே உள்ளது.கிராமங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த திடக்கழிவு மேலாண்மை திட்டம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் துாய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீடுகள் தோறும் கழிவுகளை சேகரித்து, அதன் வாயிலாக உரம் தயாரிக்கும் திட்டம் உள்ளது.இவ்வாறு கிராமங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த, பல வழிகளில் நடவடிக்கை மேற்கொண்ட நிலையிலும், நகரப்பகுதிகளிலிருந்து கிராம எல்லைகளில் கழிவுகளை கொட்டிச்செல்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது.குறிப்பாக கணக்கம்பாளையம், போடிபட்டி பகுதிகளில், உடுமலை நகரிலிருந்து இரவு நேரங்களில் குப்பைக்கழிவுகள், இறைச்சி கழிவுகளை கொண்டுவந்து கொட்டிச்செல்கின்றனர்.சில நாட்களுக்கு முன்பு, போடிபட்டி ஊராட்சிகளில் சுகாதாரத்தை மேம்படுத்த, பொது இடங்களில் குப்பைகொட்டாமல் இருப்பதற்கு, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.இதன் வாயிலாக, இரவு நேரத்தில் வாகனங்களில் வந்த நபர்கள், போடிபட்டி பிரதான ரோட்டில் மூட்டைகளில் கழிவுகளை கொண்டுவந்து கொட்டிச்செல்வது பதிவானது.இவ்வாறு விதிமுறை மீறி சுகாதார சீர்கேட்டில் ஈடுபடுவோர் மீது, தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போடிபட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.அதேபோல், மற்ற ஊராட்சிகளிலும் நகரப்பகுதிகளிலிருந்து கழிவுகளை கொட்டுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ