உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துார்வாரப்பட்ட பெரும்பள்ளம் சாமளாபுரம் குளத்துக்கு சளைக்காது நீர் வரத்து

துார்வாரப்பட்ட பெரும்பள்ளம் சாமளாபுரம் குளத்துக்கு சளைக்காது நீர் வரத்து

திருப்பூர் மாவட்டத்தின் எல்லையாக அமைந்துள்ளது சாமளாபுரம் குளம். ஏறத்தாழ, 110 ஏக்கர் பரப்பில் இந்த குளம், நொய்யல் ஆற்றிலிருந்து நீர் ஆதாரம் பெறுகிறது. நொய்யல் ஆற்றில் செந்தேவிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டிலிருந்து இதற்கான ராஜ வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.மொத்தம், 5 கி.மீ., துாரம் பயணித்து இந்த வாய்க்கால் சாமளாபுரம் குளத்தை அடைகிறது. அதன்பின் குளம் நிரம்பி வழியும் போது, அடுத்ததாக உள்ள பள்ளபாளையம் குளத்துக்கு தண்ணீர் சென்று நிரம்பும். செந்தேவிபாளையம் பகுதியிலிருந்து வரும் வாய்க்கால் பெருமளவு அப்பகுதி விவசாயிகள் முயற்சி காரணமாக துார் வாரி, நீர் வரத்து தடைப்படாமல் உள்ளது. இக்குளத்துக்கு நீர் ஆதாரமாக உள்ள மற்றொரு ஓடை பெரும் பள்ளம்.பல்லடம் அடுத்த ஆறாக்குளம் பகுதிகளில் இயற்கையாக அமைந்துள்ள ஓடைகள் பள்ளமாக உருவெடுத்து, அய்யம்பாளையம் வழியாக வந்து குளத்தை அடைகிறது. மழை நாட்களில் இப்பகுதியில் சேகரமாகும் மழை நீர் இதன் வழியாக குளத்துக்கு சேர்கிறது.

நிலத்தடி நீர் அதிகரிக்கும்

இதில் மூன்று இடங்களில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் முன் கட்டப்பட்ட இந்த தடுப்பணைகளில், மழை நாட்களில் நீர் நிரம்பி நிற்கும். இதனால், சுற்றுப்பகுதி விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர் ஆதாரம் அதிகரிக்கும் நிலை உள்ளது.இந்த தடுப்பணை பகுதிகளிலும், நீர் செல்லும் வழித்தடமும் மண் மேடுகளும், முட்புதர்களும் மண்டிக் கிடந்தது. இதனால், மழை பெய்து நீர் வந்தால் கூட பயனில்லாமல் போகும் நிலை காணப்பட்டது. இதனை அறிந்த இப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து, பேரூராட்சி தலைவர் பழனிசாமியின் மேற்பார்வையின் கீழ், இந்த பள்ளத்தை துார்வாரி, சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.

விவசாயிகள் முயற்சியால் சீரமைக்கப்பட்ட பெரும்பள்ளம்

கடந்த, 1984ல் சாமளாபுரம் குளம் முற்றிலும் வறண்டு போய்க்கிடந்தது. அப்போது இந்த பள்ளம் வழியாக கிடைத்த தண்ணீர் குளத்தை நிரப்பியது. நீண்ட காலம் துார்வாரப்படாமல் இருந்த பெரும்பள்ளம் விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் முயற்சி காரணமாக சீரமைக்கப்பட்டுள்ளது.- பழனிசாமி, பேரூராட்சி தலைவர், சாமளாபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ