உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போலீசார் எதிர்பார்ப்பு! போக்குவரத்து மாற்றத்துக்கு மக்கள் ஒத்துழைக்க...

போலீசார் எதிர்பார்ப்பு! போக்குவரத்து மாற்றத்துக்கு மக்கள் ஒத்துழைக்க...

திருப்பூர்:திருப்பூர் நகர பகுதியில் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து மாற்றங்களுக்கு மக்கள், வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர்.திருப்பூர் நகர பகுதியில் விபத்துக்களை, போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கையை மாநகர போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர்கள் உள்ளிட்டோர் கலந்து ஆலோசித்து வருகின்றனர்.அவ்வகையில், அவிநாசி ரோடு, குமார் நகரில் மையத்தடுப்புகளை மக்கள் ஆபத்தாக கடந்து செல்வதை கருத்தில் கொண்டு மையத்தடுப்பின் உயரத்தை அதிகப்படுத்தினர்.அங்கேரிபாளையம் ரோட்டில் இருந்து அவிநாசி ரோடு, 60 அடி ரோட்டுக்கு வாகனங்கள் செல்லுமாறு மாற்றினர். எஸ்.ஏ.பி., - புஷ்பா - டவுன் ஹால் போன்ற இடங்களில் தாறுமாறாக நின்று செல்லும் பஸ்களை சீராக நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் பேரி கார்டு தடுப்புகள் மூலம் 'பஸ் பே' ஏற்படுத்தினர்.மாநகராட்சி அலுவலக சந்திப்பில் நிற்கும் நேரத்தை குறைக்கும் வகையில், 'பீக் ஹவர்சில்' புதிய மார்க்கெட் ரோடு வழியாக பஸ் வெளியேறாமல், பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறி சுற்றி வரும் வகையில் மாற்றம் செய்தனர். இதுபோன்ற ஒவ்வொரு விஷயத்திலும் மாநகர போலீசார் கவனம் செலுத்தி போக்குவரத்து மாற்றங்களை செய்தாலும், போலீசார் இருந்தால் மட்டுமே சிலர் அந்த மாற்றங்களை பின்பற்றுகின்றனர்.இல்லாவிடில், பழையபடி செல்வதையே சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். வளையன்காடு ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் இடது புறமாக திரும்பி, கமிஷனர் அலுவலகம் அருகே 'யூடர்ன்' போட்டு செல்ல போலீசார் அறிவுறுத்தியும் கூட, இன்னமும் குமார் நகர் சிக்னலில் நின்று ரோட்டை கடந்து வருகின்றனர். அங்கிருக்கும் போலீசாரின் அறிவிப்பை கவனிக்காமல் கடந்து வருகின்றனர். நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்த செய்யப்படும் மாற்றங்களை மக்கள் உணர்ந்து, ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது போலீசாரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை