ரயில் பயணிகள் ஆலோசனை குழு திருப்பூரை சேர்ந்தவர் நியமனம்
திருப்பூர்; மத்திய ரயில்வே அமைச்சகம், ரயில் பயணிகள் நலன் மற்றும் ரயில்வே திட்ட பணிகளை மேம்படுத்தும் வகையில், மண்டல அளவிலான பயணிகள் ஆலோசனை குழுவை நியமித்துள்ளது. இக்குழுவினர், 2025 மற்றும் 2026ம் ஆண்டுகளில் பொறுப்பில் இருப்பார்கள்.தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுவை ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய, தெற்கு ரயில்வே மண்டல அளவில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஐந்து மாநில அரசுகள் சார்பில் தலா ஒருவர்; மாநில அரசுகள் சார்பில், தலா ஒரு எம்.எல்.ஏ., நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.வணிக அமைப்புகள் சார்பில், ஐந்து பேர், மாநில அரசுகள் பரிந்துரைக்கும் விவசாய சங்க பிரதிநிதிகள் இருவர், கோட்ட அளவிலான பயணிகள் குழுவை சேர்ந்த ஒருவர், பதிவு செய்த பயணிகள் சங்கங்களில் இருந்து இருவர், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பில் இருந்து ஒருவர், எம்.பி., ஏழு பேர் மற்றும் மூன்று ராஜ்யசபாஎம்.பி.,க்கள், மத்திய அமைச்சர்கள் நியமனம் செய்யும் தலா ஒருவர்; ரயில்வே பொதுமேலாளர் பரிந்துரையின் படிஒருவர்; மத்திய ரயில்வே அமைச்சர் நியமனம் செய்யும் எட்டு உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள் நலசங்கத்தை சேர்ந்த ஒருவர் உட்பட, பல்வேறு தரப்பில் இருந்து, உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மத்திய ரயில்வே பொது மேலாளர் பரிந்துரையின் அடிப்படையில், திருப்பூரை சேர்ந்த மோகனசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 'லகு உத்யோக் பாரதி' அமைப்பின் தேசிய இணை பொதுசெயலாளராக பணியாற்றி வருகிறார். தென் மாநிலங்கள் அளவில் இயங்கும், மண்டல அளவிலான ரயில்வே பயணிகள் குழு, ரயில்வே நிர்வாகம் மற்றும் பயணியர் இடையே இணைப்பு பாலமாக செயல்படும். திருப்பூர் பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வரும் ஒருவர், குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதால், திருப்பூருக்கு பயனுள்ளதாக இருக்குமென, தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர்.