திருப்பூர்: ''ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய 5 நபர்கள் குறித்த தகவல் தெரிவித்தால், ஒரு நபருக்கான தகவலுக்கு 5 லட்சம் ரூபாய் வீதம், 25 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும்'' என்ற தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.,) சார்பில் திருப்பூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பா.ம.க., பிரமுகர். கடந்த 2019 பிப்., மாதம் 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு(என்.ஐ.ஏ.,) மாற்றப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக சென்னை, என்.ஐ.ஏ., சார்பில், திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்:ராமலிங்கம் கொலை வழக்கில் தொடர்புடைய தஞ்சாவூர், திருப்புவனம், முகமது அலி ஜின்னா, 37, மேலக்காவேரி, அப்துல் மஜீத், 40, பாபநாசம், புர்ஹானுதீன், 31, திருவிடைமருதுார், ஷாஹீல்ஹமீத், 30, திருமங்கலக்குடி, நபீல்ஹாசன், 31 ஆகியோர் குறித்த தகவல் தருபவருக்கு, நபர் ஒருவருக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வீதம், 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை சன்மானமாக வழங்கப்படும். தகவல் தெரிவிப்பவர் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். தொடர்பு கொள்ள மொபைல் எண்: 94999 45100, 9962361122); இ மெயில்: infoche.gov.in.இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.